சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த மனு கிடைத்ததா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு செந்தில் பாலாஜி இல்லை என தெரிவித்ததையடுத்து மனுவை கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ளும்படி நீதிபதி அல்லி அறிவுறுத்தினார்.
செந்தில் பாலாஜி கைதில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. நள்ளிரவில் கைது செய்தது சட்டவிரோதமானது . மனைவியிடம் உறவினர்களிடம் சட்டப்படி கைது குறித்து தெரியப்படுத்த வேண்டும் அதை செய்யவில்லை என என். ஆர். இளங்கோ தனது வாதங்களை முன் வைத்தார்.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், அதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர் தற்போது உடல் நலக்குறைவு என கூறுகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம் என அமலாக்கத்துறை சார்பில் ஏ.ஆர்.எஸ் சுந்தரேசன் தனது வாதத்தை முன் வைத்தார்.
மேலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கப்பிரிவு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி அல்லி தீர்ப்பளிக்கிறார். இதனையடுத்து 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு குறித்து செந்தில் பாலாஜியின் விருப்பம் குறித்து நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார்.
அதற்கு செந்தில் பாலாஜி விசாரணைக்கு தற்போது விருப்பமில்லை என்று பதிலளித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற உத்தரவை படித்த பிறகு, இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்படும் என்றார்.
இந்நிலையில் தான் இன்று மீண்டும் நீதிபதி அல்லி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 3 நாளில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது. ஆனால் அந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, அவரது மனுவை தள்ளுபடி செய்தது.