ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனு.. காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

post-img
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர், கடந்த ஜூலை மாதம் சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி சேகர், திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் கட்சியில் இருந்த அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய அரசியல் பிரமுகர்களும், பிரபல ரௌடிகளும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்போ செந்தில் உள்ளிட்ட முக்கிய ரௌடிகள் பலர் போலீஸ் தேடலில் உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரௌடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், சம்பவம் செந்தில் உள்ளிட்டோர் மீது போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அஸ்வத்தாமன் உட்பட மொத்தம் 26 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 10 பேர் குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் கூட்டு சதி உட்பட பல்வேறு சதிச்செயல்கள் அரங்கேறியுள்ளதால் அதுதொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில், திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்திருந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நாகேந்திரன் தரப்பில், மருத்துவ காரணங்களுக்காக நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கிற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்து வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பொற்கொடி, அஞ்சலை, மலர்கொடி ஆகியோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த மனுக்களுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணையில் இருந்து நாகேந்திரன் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜராக அனுமதியளித்து வழக்கின் விசாரணையை ஜனவரி 4 ம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Related Post