இனிமேல் நீங்கள் கூகுள் பேவை விட போன்பே ஆப்பை அதிகமாக பயன்படுத்தலாம். ஏனென்றால், போன்பே ஆப்பில் "ஆத்திர அவசரத்திற்கு" பணம் செலுத்தும் ஒரு அட்டகாசமான அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதென்ன அம்சம்? அதனால் நமக்கு என்ன பயன்? அந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி? இதோ விவரங்கள்:
போன்பே ஆப்பில் அப்படி என்ன அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது? இந்தியாவின் முக்கியமான யுபிஐ பேமண்ட் ஆப்களில் ஒன்றான போன்பேவில் யுபிஐ லைட் (UPI Lite) என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யுபிஐ லைட் என்பது சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகளை விரைவாகவும் எளிதாகவும் நடத்த உதவும் ஒரு அம்சமாகும்.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், யுபிஐ லைட் அம்சத்தின் கீழ் பின் நம்பரை (PIN Number) டைப் செய்யாமலேயே.. சட்டென ரூ.200 வரையிலான பண பரிவர்த்தனையை செய்ய முடியும். இந்த அம்சம் பயனர் அனுபவத்தை (User experience) மேம்படுத்துவது மட்டுமின்றி பரிவர்த்தனை தோல்விகளையும் (Transaction Failures) குறைக்கும் என்றும் போன்பே நம்புகிறது.
யுபிஐ லைட் எப்படி வேலை செய்யும்? போன்பே நிறுவனத்தின் கூற்றுப்படி, புதிய யுபிஐ லைட் அம்சமானது நீங்கள் அக்கவுண்ட் வைத்துள்ள வங்கிகளின் நிகழ்நேர அமைப்புகளுடன் (Real-time systems) இணைக்கப்படாது. மாறாக யுபிஐ லைட் அக்கவுண்ட்டில் (UPI Lite Account) சேமிக்கப்பட்டுள்ள பேலன்ஸை (Balance) பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும்.
இது வங்கிகளுடன் இணைந்து நடக்கும் வழக்கமான யுபிஐ பரிவர்த்தனைகளை விட வேகமாகவும் மென்மையாகவும் நடக்கும். மேலும் முன்னரே குறிப்பிட்டபடி, இந்த பணப் பரிவர்தனையானது யுபிஐ லைட் அக்கவுண்ட் வழியாகவே நடக்கும் என்பதால், இதை செய்ய பின் நம்பரை உள்ளிட வேண்டிய அவசியம் இருக்காது.
எங்கெல்லாம் யுபிஐ லைட் அம்சத்தை பயன்படுத்த முடியும்? அனைத்து முக்கிய வங்கிகளின் ஆதரவுடன், நாடு முழுவதும் உள்ள எந்தவொரு யுபிஐ வணிகர் (UPI Merchant) அல்லது க்யூஆர் குறியீட்டிலும் (QR code) பணம் செலுத்துவதற்கு, போன்பேவில் உள்ள யுபிஐ லைட்டை பயன்படுத்த முடியும் என்று போன்பே நிறுவனம் கூறியுள்ளது.
போன்பே ஆப்பில் யுபிஐ லைட் அம்சத்தை ஆக்டிவேட் (Activate) செய்வது எப்படி? போன்பே பயனர்கள் எந்த கேஒய்சி (KYC) அங்கீகாரமும் இல்லாமல் யுபிஐ லைட் அம்சத்தை எளிதாக செயல்படுத்த முடியும். உங்கள் போனில் உள்ள போன்பே ஆப்பை திறந்து ஹோம் ஸ்க்ரீனில் (Home Screen) உள்ள யுபிஐ லைட் இயக்குவதற்கான விருப்பத்தை கிளிக் செய்யவும்.
பின்னர் யுபிஐ லைட்டில் நீங்கள் சேர்க்க விரும்பும் தொகையை உள்ளிட்டு உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை தேர்ந்தெடுக்கவும். பிறகு உங்கள் யுபிஐ பின் நம்பரை (UPI PIN Number) உள்ளிடவும். அவ்வளவு தான் உங்களுக்கான யுபிஐ லைட் அக்கவுண்ட் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு இருக்கும்.
யுபிஐ லைட் அக்கவுண்ட்டில் அதிகபட்சமாக எவ்வளவு பணம் சேர்க்கலாம்? போன்பே நிறுவனத்தின் கூற்றுப்படி, போன்பே ஆப்பில் உருவாக்கப்படும் யுபிஐ லைட் அக்கவுண்ட்டில் ரூ.2000 வரையிலான தொகையை சேர்க்க முடியும். ஒரு நேரத்தில் ரூ.200 அல்லது அதற்கும் குறைவான தொகையை மட்டுமே அனுப்ப முடியும். நினைவூட்டும் வண்ணம் போன்பேயின் மற்றொரு போட்டியாளரான பேடிஎம் (Paytm) ஆப்பில் இதேபோன்ற அம்சம் இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிமுகமாகி விட்டது.