சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திமுக தலைமை குறித்து கடுமையாக விமர்சித்ததற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் அவர் இணைய போவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது தொடர்பாக அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாக மாறி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறிய விஜய் சொன்னது போலவே அரசியலில் குதித்து இருப்பது அவரது ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டின் மூலம் விஜய் பரபரப்பு அரசியலில் கால் எடுத்து வைத்திருக்கிறார்.
மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் பேச்சு, போட்டி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என தீவிர அரசியல் செய்து வரும் நிலையில் விஜய்க்கு அதிக ஊடக வெளிச்சம் இருக்கிறது. ஒரு ட்வீட் போட்டாலே அது பிரேக்கிங் செய்திகளாக மாறிவிடுகிறது. அது மட்டுமல்லாமல் மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு பல முன்னணி கட்சிகளை அதிர வைத்திருக்கிறது. பாஜகவும், திமுகவும் தான் தனது எதிரி என விஜய் பேசியது இரு கட்சிகளையும் கொந்தளிக்க வைத்தது.
அதே நேரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியிலும் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே துணை பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டார். மேலும் கட்சி நிகழ்ச்சிகள், மாநாடுகள், சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளிட்டவை ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஜெயிக்க முடியாது என பேசியது திமுக தலைமையை கோபத்தில் ஆழ்த்தியது.
தொடர்ந்து திருமாவளவனின் சமூக வலைதள பக்கத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என வெளியாகி வீடியோ நீக்கப்பட்டதும், பின்பு சேர்க்கப்பட்டதும், மீண்டும் நீக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி எம்எல்ஏக்களே ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு திருமாவளவன் தலையிட்டு இந்த விவகாரத்தை முடித்து வைத்தார்.
இந்த நிலையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜயும், திருமாவளவனும் கலந்து கொள்வார்கள் என பேசப்பட்டது, திமுக தலைமையை கோபத்தில் ஆழ்த்தியது. ஆனால் அதில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை. திமுக கூட்டணியின் அழுத்தத்தால் தான் திருமாவளவன் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை தான் உணர்வதாக விஜய் பேசியது, அதனை திருமாவளவன் மறுத்தது என மீண்டும் பிரச்சனை எழும்பியது.
குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா மன்னராட்சி முறையை ஒழிக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என திமுக தலைமையை குறித்து பேசியது பிரச்சினையை பெரிதாக்கியது. இதனையடுத்து விசிக கட்சியிலிருந்து அவர் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவார் என கூறப்படுகிறது.
ஆனால் அது தொடர்பான எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அதே நேரத்தில் அதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடனும் விஜய்க்கு நெருக்கமான தவெக நிர்வாகி ஒருவருடனும் ஆதவ் அர்ஜுனா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கட்சி 'தலைமை' உடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய இணைப்பு நிகழ்ச்சி ஒன்று இருக்கும் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.