குழந்தைக்கு பெயர் வைப்பதில் சண்டை.. நீதிமன்றமே பெயர் சூட்டிய சூப்பர் சம்பவம்.. என்ன பெயர் தெரியுமா?

post-img
மைசூரு: மைசூரைச் சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகளான நிலையில், குழந்தை பிறந்தது முதலே பெயர் வைப்பதில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தப் பிரச்னை நீதிமன்றம் வரை வந்த நிலையில், நீதிமன்றமே குழந்தைக்கு பெயரை சிபாரிசு செய்து பெயர் சூட்டப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஊராக இருந்தாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி கணவன், மனைவிக்கிடையேயான பிரச்னை என்பது இருந்து கொண்டேதான் இருக்கும். ஊடல் காதல் இவை இரண்டுமே இல்லற வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் கூறுகளாகும். அதேபோல, திருமண பந்தத்தில் குழந்தை என்பது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். ஒரு குழந்தையின் வரவு ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்க்கையையுமே அழகாக மாற்றிவிடும். Image: AI created அந்த வகையில், மைசூரில் உள்ள ஒரு தம்பதிக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. எல்லாம் சுமூகமாக போய்க் கொண்டிருந்த நிலையில், குழந்தைக்கு பெயர் வைப்பதில் ஏற்பட்ட மனக்கசப்பால் தம்பதி இருவருமே கடந்த மூன்று ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இப்பிரச்னை நீதிமன்றம் வரை செல்லவே, நீதிமன்றமே குழந்தைக்கு பெயர் சூட்டி, கணவன் மனைவியை சேர்ந்து வைத்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், ஹுன்சூர் பகுதியைச் சேர்ந்தவர் திவாகர். இவருடைய மனைவி அஸ்வினி. இந்த தம்பதிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்தது முதலே பெயர் வைப்பது தொடர்பாக இருவருக்கும் அவ்வப்போது பிரச்னை எழுந்து வந்துள்ளது. குழந்தைக்கு தந்தையான திவாகர், ஆதி என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், மனைவி அஸ்வினியோ வங்கிஷ் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதனால், திவாகருக்கும், அஸ்வினிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அஸ்வினி தன்னுடைய தாய் வீட்டிற்கு குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். இந்நிலையில், திவாகர் மீது மனைவி அஸ்வினி ஹுன்சூரின் எட்டாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தார். மேலும், தான் தேர்ந்தெடுத்த பெயரையே குழந்தைக்கு சூட்ட கணவரிடம் உத்தவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விசராணைக்கு வந்துள்ளது. அப்போது, இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோவிந்தையா, குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் என்ன பிரச்னை. பெயரில் என்ன இருக்கிறது. குழந்தைக்கு நல்ல பண்பாடு, உயர் கல்வியைப் கொடுங்கள் அதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார். மேலும், நீதிமன்றத்தின் சார்பில் குழந்தைக்கு பெயர் வைப்பதற்காக சில பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. அப்போது, அரசு உதவி வழக்கறிஞர் செளமியா குழந்தைக்கு ஆர்யவர்தன் என்ற பெயரை பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து, ஆர்யவர்தன் என்ற பெயரையே நீதிபதி கோவிந்தையா அனைவரது முன்னிலையிலும் குழந்தைக்கு சூட்டியுள்ளார். பின்னர், குழந்தைக்கு இனிப்பும் ஊட்டினார். இந்தப் பெயருக்கு திவாகரும், அஸ்வினியும் சம்மதம் தெரிவித்தனர். அதேபோல, இனி ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வதாகவும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

Related Post