நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்ட முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா, மாவட்ட எஸ்.பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான குமரகுருபரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இம்மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ்டு 4ம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் ஆக.5 முதல் 16ம் தேதி வரை நடைபெறும். காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் 5.30 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம் நடைபெறும்.
நாமக்கல் மாவட்டத்தில் விண்ணப்ப பதிவு முகாம் பணிகளை ஒருங்கிணைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நடைபெறவுள்ள 611 முகாம்களுக்கும், இரண்டாம் கட்டமாக நடைபெறவுள்ள 303 முகாம்களுக்கும் மொத்தம் 914 முகாம் பொறுப்பு அலுவலர்களும், 5 முகாமிற்கு 1 மண்டல அலுவலர் என 126 மண்டல அலுவலர்களும், 15 முகாமிற்கு 1 மேற்பார்வை அலுவலர் என 49 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் விண்ணப்ப பதிவு பணிகளை மேற்கொள்ள 4,800 க்கும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
முகாமில் ஈடுபாடும் தன்னார்வலர்களுக்கு இரண்டு கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கும் தகுதியுடைய குடும்ப தலைவிகள் அனைவருக்கும் இத்திட்டம் சென்றடையும் வகையில், அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) லதா, டி.ஆர்.டி.ஏ. திட்ட இயக்குநர் சிவகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.