சென்னை: சென்னையில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளது. அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் விழாவுக்கு பலகோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜகவின் மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் நேற்று 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முன்னாள் நீதிபதி சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
விழாவில் நடிகர் விஜய் புத்தகத்தை வெளியிட முன்னாள் நீதிபதி சந்துரு பெற்று கொண்டார். இந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் திமுக மற்றும் திமுக தலைவர்களின் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ‛‛பிறப்பால் முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது. மன்னராட்சி தான் இங்கு இருக்கிறது. மன்னராட்சியை கேள்வி கேட்டால், சங்கி என்று சொல்கிறார்கள். கொள்கைகளைப் பேசிக்கொண்டு ஆட்சிக்கு வந்து ஊழலை செய்யக்கூடிய நிலை இருக்க கூடாது. தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டார்கள்.2026ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும். பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது.
தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும்'' என்று பேசினார். இதன்மூலம்திமுகவின் பெயரை குறிப்பிடாமல் ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது தான் தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு என்பது திமுகவினரை டென்ஷனாக்கி உள்ளது. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தமிழக பாஜகவினர் மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா, ஆதவ் அர்ஜூனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எந்த தார்மீகத்தில் பேசுகிறீர்கள் ஆதவ் அர்ஜூனா? நேற்றைய புத்தக வெளியீட்டு விழா பல கோடிகள் கொட்டி மிக மிக செயற்கையாகவும், புத்தக வெளியீடுகளுக்கே உண்டான உயிர் இல்லாமல் சிலரை மட்டுமே promote செய்யும் விழாவாக அமைந்து முடிந்துள்ளது.
எளியோருக்காக பேசுகிறேன், எளியோர் வாழ்வை முன்னேற்ற பேசுகிறேன், எளியோரை அரசியல்படுத்த பேசுகிறேன் என சொல்வதெல்லாம் சரி தான், ஆனால் அதை யார் சொல்கிறார்கள் என்பதும் முக்கியம். இந்தியாவில் வாரிசு அரசியல்வாதிகள் சோபித்த வரலாறு பல உண்டு ஆனால் திடீர் குபீர் parachuted அரசியல்வாதிகள் சோபித்த வரலாறு எனக்கு தெரிந்து இல்லை.
பொது தளத்திலேயே இல்லாத ஒருவர், உருப்படியாக கோர்வையாக தமிழே பேச வராத ஒருவர் திடீரென parachute செய்யப்பட்டு பல கோடிகளை கொட்டி ஒரு பிரபல ஊடக நிறுவனத்தின் குடையில் ஒரு புத்தக வெளியீட்டை நடத்தி தன்னை மிகப்பெரிய அரசியல் சாணக்கியன் போல நிறுவ முயல்வது ஆபாசமாகவும், அபத்தமாகவும் இல்லையா? மக்களை இளிச்சவாயர்களாக கருதுவது போல் இல்லையா? இந்த சர்க்கஸ் கூத்தை ஊதி பெரிதாக்க மேலும் பல கோடிகள் ஊடகங்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் வலையொளிகளுக்கும் கொட்டப்பட்டுள்ளதும் கண்க்கூடாக தெரிகிறது.
நம் கேள்வி ஒன்றே? இத்தனை கோடிகளை கொட்டி தான் எளியோருக்கான உரிமைகளை பெற்றுத் தர போகிறீர்களா? இப்படி கொட்டப்படும் கோடிகள் எளியோரை சுரண்டாமல் வந்ததென எதன் அடிப்படையில் மக்கள் முடிவு செய்வது? இதென்ன கேலிக்கூத்து? தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது என்றே புரியவில்லையே?
கோடிகளை கொட்டினால் நாளை திடீரென குதிக்கும் ஒருவரை ஆகச்சிறந்த அரசியல்வாதியாக உருவாக்கி விட முடியும் என்றால் இதை விட எப்படி அண்ணல் அம்பேத்கர் வகுத்த அரசியல்சாசனத்தை ஏளனப்படுத்த முடியும்? நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரே 15 நிமிடம் தான் பேசுகிறார். ஆனால் இந்த திடீர் அரசியல்வாதி 24 நிமிடம் பேசுகிறாரே? பார்க்க சகிக்கவில்லை. வாரிசு அரசியலை எதிர்ப்பவர்கள் தான் நாங்கள், ஆனால் அதற்கு முன்பு இந்த திடீர் குபீர் அரசியல்வாதிகளை தோலுரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது போல.
அண்ணல் அம்பேத்கரை போற்றுகிறேன் என்ற பெயரில் நடைபெற்றுள்ள இந்த கேலிக்கூத்து உண்மையில் அண்ணலை அவமதித்துள்ளது. இந்நிகழ்விற்கு கொட்டப்பட்ட பல கோடி ரூபாய் தாள்கள் அவரின் தூய்மையான எண்ணத்தை களங்கப்படுத்தி உள்ளது என்பதே நிதர்சனம்'' என கூறியுள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage