சென்னை: தலைநகர் சென்னையில் வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய வேகக் கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்தது. எனவே, வாகன ஓட்டிகள் இதை முறையாகக் கடைப்பிடிக்கவும்.
தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல ஊர்களில் வசிப்போர் சென்னைக்கு வருவது, அதிகரிக்கும் டூ வீலர் பயன்பாடு என இப்படி டிராபிக் அதிகரிக்க பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
டிராபிக் நெரிசல் அதிகரிப்பதால் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக பீக் ஹவரிகளில் தனியாகச் சொல்ல தேவையில்லை. டிராபிக் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.
டிராபிக்: இப்படி சாலைகளில் டிராபிக் அதிகரிப்பதால் விரைவாக ஒரு இடத்திற்குச் சென்று சேர முடிவதில்லை. இதனால் சென்னையில் பலரும் வாகனங்களை அதிவேகமாக இயக்குகிறார்கள். நாம் சாலையில் செல்லும் போதே இதுபோல அதிவேகமாக வாகனங்களை இயக்குவதைப் பார்த்திருக்கலாம். இதனால் சென்னையில் வாகன விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே நாட்டில் அதிக வாகன விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது.
ஏற்கனவே, சாலைகளில் டிராபிக்கை குறைக்கத் தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல மறுபுறம் விபத்துகளைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் வாகனங்களுக்கு அதிகபட்ச வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அந்த புதிய விதிமுறைகள் இன்று அமலுக்கு வருகிறது.
சென்னை போலீசார்: இது குறித்து சென்னை போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகன ஓட்டிகள் வேகவரம்பை கடைப்பிடிப்பது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது சென்னையில் மட்டும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சாலையைப் பயன்படுத்துபவர்கள் போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவது பாதுகாப்பான போக்குவரத்து சூழலுக்கு வழி வகுக்கும், இதனால் குறிப்பாக, விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாமல் மற்ற சாலைப் பயணிகளையும் பாதிப்படையச் செய்யும் என்பதால் வேக வரம்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
3 நாள்.. சென்னை-நெல்லை இடையே தீபாவளி சிறப்பு ரயில்.. உடனே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்! நல்ல சான்ஸ்
வேக கட்டுப்பாடு: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலை கட்டமைப்புகளில் நவீன முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற உண்மைகளைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகரில் பல்வேறு வகை வாகனங்களுக்கு 2003ல் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மறுமதிப்பீடு செய்து வேக வரம்பினை மாற்றியமைக்க வேண்டும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமைத்தார்.
சென்னை பெருநகரில் உள்ள சாலைகளின் வகை மற்றும் பல்வேறு வாகன வகைகள் மற்றும் இடங்களுக்கான வேக வரம்புகள் குறித்து இக்குழு பரிந்துரை செய்தது. அதன்படி, இலகுரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 60 கி.மீ ஆகவும், கனரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், ஆட்டோக்களின் அதிகபட்ச வேக வரம்பு 40 கி.மீ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதுவே குடியிருப்பு பகுதிகளுக்குள் அனைத்து வகை வாகனங்களுக்குமான அதிகபட்ச வேக வரம்பு 30 கி.மீ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாகன வேக வரம்புகளை அமல்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது" என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த அதிகபட்ச வேகக் கட்டுப்பாட்டு வரம்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. எனவே, வாகன ஓட்டிகள் இந்த புதிய வேக வரம்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.