திமுக அரசை வெளுத்த வேல்முருகன்! கூட்டணிக்கு குட்பை? அதிர்ந்த அறிவாலயம்.. மகிழ்ச்சியில் அதிமுக?

post-img
சென்னை: விடுதலைச் சிறுத்தைகளைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் திமுக கூட்டணியில் கலகக் குரல்களை எழுப்பி வருகிறது. மழை, வெள்ள பாதிப்பு விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ, அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'டோனி'ல் பேசிவருவது திமுக கூட்டணியை அதிர வைத்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியை விட்டு வெளியேறி அதிமுக அணிக்கு வேல்முருகன் தாவப் போகிறாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு வெளியேறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியைத் தொடங்கிய வேல்முருகன் அதிமுக, திமுக கூட்டணிகளில் மாறி மாறி இடம் பெற்றுள்ளார். திமுக கூட்டணியில் தற்போது இடம் பெற்றிருந்தாலும் அண்மையில் திமுக அரசுக்கு எதிரான விமர்சனங்களை பகிரங்கமாகவும் முன்வைத்து வருகிறார். சட்டசபையில் மோதல்: தமிழக சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் என் தொகுதிக்கு 4 ஆண்டுகளில் ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை என பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார் வேல்முருகன். இதனை சபை குறிப்பில் இருந்து சபாநாயகர் அப்பாவு நீக்க கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார் வேல்முருகன். துணை முதல்வர் விசிட்டில் புறக்கணிப்பு: தற்போது கடலூர் மாவட்ட வெள்ள பாதிப்பை முன்வைத்து, தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், கடலூர் மாவட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட துணை முதல்வர் வருகிறார். ஆனால் புரட்டகால்படி மாவட்ட நிர்வாகம் எனக்கு எந்த தகவலும் சொல்லவில்லை. துணை முதல்வர் அலுவலகத்தில் இருந்தும் எனக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை. இங்கே இருக்கிற மாவட்ட அமைச்சர்கள் 2 பேரிடமும் இருந்தும் எனக்கு தகவல் தரவில்லை. வேளாண்மை அமைச்சர் மட்டும் துணை முதல்வர் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன்னதாக தகவல் தெரிவித்தார். ஒரு முதல்வர், துணை முதல்வர் வருகிறார் எனில் தொகுதி மக்களுக்கு சொல்ல வேண்டுமா? இல்லையா? பேரிடர் துறை எதற்கு?: எந்த ஒரு திட்டமிடலும் இல்லாத நிலையில் எதற்கு பேரிடர் துறை அமைச்சர்? எதற்கு பேரிடர் துறை? ரொம்ப வருத்தமாக இருக்கிறது. கால் நூற்றாண்டு காலமாக இந்த பிரச்சனை பற்றி சட்டசபையில் பேசி வருகிறேன். திமுக தேர்தல் அறிக்கை என்னாச்ச்?: மழைக்கால கூட்டத் தொடரை குறைந்தபட்சம் 10 நாட்களாவது நடத்துங்க என கதறுகிறேன்.. சட்டசபையில் குரல் கொடுக்கிறேன். அந்த குரலுக்கு செவி சாய்க்கவில்லை. வெறும் 2 நாள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடத்தினால் எப்படி? ஆண்டுக்கு ஒரு முறை 100 நாட்கள் சட்டசபை கூட்டம் நடத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கை சொல்கிறது.. ஆனால் ஏன் அதனை நிறைவேற்றவில்லை? உண்மையான உயிர் பலி எவ்வளவு?: தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. தாமிரபரணி கரை புரண்டோடுகிறது. அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக செய்கிறார்கள். இதனால் பல உயிர்கள் பலியாகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 உயிர்கள் பலியானதாக அமைச்சர் தெரிவிக்கிறார்; ஆனால் தமிழ்நாடு அரசு எத்தனை பேர் பலியானதாக முழுமையாக அறிவிக்கவில்லை. நவம்பர், டிசம்பர் மாதம் மழைக்காலம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றெல்லாம் கொந்தளித்துள்ளார். எடப்பாடி குரலில் பேசும் வேல்முருகன்: இதில் தமிழ்நாடு சட்டசபையை 100 நாட்கள் நடத்தவில்லை; வெறும் 2 நாட்கள் மட்டுமே நடத்தினால் மக்கள் பிரச்சனையை எப்படி பேசுவது? என்கிற கேள்விகளை சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுப்பி இருந்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி டோனிலேயே வேல்முருகனும் பேசியிருக்கிறார். இதனால் வேல்முருகன், அதிமுக பக்கம் சாயத் தயாராகிவிட்டாரா? அதிமுக கூட்டணிக்கு தாவப் போகிறாரா? என்கிற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Related Post