கார், பைக் பரிசு.. சிறப்பாக வேலை செய்த ஊழியர்களுக்கு அள்ளி கொடுத்த சென்னை நிறுவனம்! அடடே செம

post-img
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான கார், பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளது. 14 ஸ்கூட்டர், 2 புல்லட் பைக், ஒரு கார் ஆகியவை சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக உலகெங்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஊக்கப்படுத்த பல்வேறு சலுகைகளை வழங்கும். ஆனால், அது பெரும்பாலும் ஓரிரு ஆயிரம் மதிப்பிலான வவுச்சர்களாக மட்டுமே இருக்கும். ஆனால், சில நிறுவனங்களை அதைத் தாண்டி சிறப்பாக வேலை செய்யும் ஊழியர்களை ஊக்குவிக்கப் பல சலுகைகளை வாரி வழங்குவார்கள். அப்படிதான் சென்னை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், கார்கள், பைக்குகள் உள்ளிட்டவற்றை அள்ளி கொடுத்துள்ளது. சென்னை சேத்துப்பட்டில் இயங்கி வரும் தனியார் லாஜிஸ்டிக் நிறுவனம் தான் இப்படி தனது ஊழியர்களுக்குப் பரிசுகளை வாரி வழங்கியுள்ளது. சென்னை நிறுவனம்: சர்மவுண்ட் என்ற அந்த நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிறுவனம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில் கார்கள், பைக்குகள் உள்ளிட்ட பரிசுகளை அள்ளி கொடுத்துள்ளார் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். இதற்காக அலுவலகத்திலேயே பிரம்மாண்டமாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி ஊழியர்களுக்குப் பரிசை கொடுத்துள்ளார். ஊழியர்களுக்கு கார், பைக் பரிசு: 14 ஊழியர்களுக்கு ஸ்கூட்டி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இருவருக்கு ராயல் என்ஃபீல்டு 350 புல்லட் வாகனத்தைப் பரிசாக தந்துள்ளனர். இது தவிர ஒரு ஊழியருக்கு காரும் கூட பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதை நம்பவே முடியாத ஊழியர்கள், பரிசை வாங்கியதும் திக்குமுக்காடி போனார்கள். மொத்தம் ரூ. 25 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராயன், "நாங்கள் கடந்த 2022ம் ஆண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது என்ற போதிலும் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை நாங்கள் அங்கீகரிக்க விரும்பினோம். இதனால் ஊழியர்களுக்கு கார், பைக்குகள் ஆகியவற்றைப் பரிசாக வழங்கி இருக்கிறோம். என்ன காரணம்: நான் சொந்தமாக இந்த நிறுவனத்தைத் தொடங்கும் முன்பு 19 ஆண்டுகள் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். அப்போது எனக்கு நிறுவனத்திடம் எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும், அவை எதுவும் நிறைவேறவில்லை. எனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் இதுபோல எதிர்பார்ப்பு இருந்து நிறைவேறாமல் போகக்கூடாது என்பதற்காகவே இந்த பரிசுகளை வழங்கி இருக்கிறோம். 25 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் கொடுத்துள்ளோம்" என்றார். பரிசை வாங்கிய அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இது தொடர்பாகக் கூறுகையில், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.. நாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு எல்லாம் ஒரு பைக் அல்லது கார் வாங்கவே பல ஆண்டுகள் ஆகும். ஆனால், எங்கள் நிறுவனம் அதையே பரிசாக வழங்கியுள்ளது. தினசரி ஆபீஸ் வந்து செல்ல இது நிச்சயம் உதவும்" என்றார். ஊழியர்களுக்கு கார், பைக்கை அள்ளி கொடுத்த இந்த நிறுவனத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Related Post