ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் குழந்தை பிறக்க வேண்டி உயிருடன் கோழிக்குஞ்சை விழுங்கிய 35 வயது இளைஞர் பலியானார். அவரது தொண்டையில் சிக்கிய கோழிக்குஞ்சு உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஜோதிடர் கூறியதால் அந்த நபர் கோழிக்குஞ்சை விழுங்கி இருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபுரம் அருகே சிந்த்காலோ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). திருமணம் ஆனவர். இவருக்கு குழந்தை இல்லை. குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக கணவன் - மனைவி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனாலும் அது பலனிக்கவில்லை.
Image: AI created
இந்நிலையில் தான் ஆனந்த் யாதவ் தனது வீட்டில் குளித்துவிட்டு குடும்பத்தினருடன் இருந்தார். அப்போது அவர் திடீரென்று தனது வீட்டில் மயங்கினார். இதை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆனந்த் யாதவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் சாந்து பாக் என்பவர் பிரேத பரிசோதனை மேற்கொண்டார். அப்போது இறந்த ஆனந்த் யாதவின் தொண்டைப்பகுதியில் உயிருடன் கோழிக்குஞ்சு இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த கோழிக்குஞ்சு தான் அவரது இறப்புக்கு காரணம் என்பதும் தெரியவந்தது.
அதாவது ஆனந்த் யாதவ் தொண்டையில் சுவாசக்குழாய் மற்றும் உணவுப்பாதையை கோழிக்குஞ்சு அடைத்துள்ளது. இதனால் மூச்சுவிட முடியாமல் ஆனந்த் யாதவ் இறந்திருக்கலாம் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர் சாந்து பாக் கூறுகையில், ‛‛நான் இதுவரை 15 ஆயிரம் உடற்கூறாய்வு செய்துள்ளேன். ஆனால் இப்போது தான் இதுபோன்ற விசித்திரமான சம்பவத்தை பார்க்கிறேன்.
இதையடுத்து ஆனந்த் யாதவ் தொண்டையில் கோழிக்குஞ்சு எப்படி சிக்கியது? என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையின்போது அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுகையில், ‛‛ஆனந்த் யாதவுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்று வரை குழந்தை பிறக்கவில்லை.
குழந்தை வேண்டி ஆனந்த் யாதவ் மாந்திரீகர்கள், ஜோதிடர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார். அவர்கள் சொன்னது போல் நடந்து கொண்டார். பரிகார பூஜைகளை செய்தார். தற்போதும் கூட குழந்தை வரம் கிடைக்க ஜோதிடர் அல்லது மாந்தீரிகர்கள் கூறிய பிறகு தான் அவர் கோழி குஞ்சை விழுங்கியிருப்பார்’’ என்று கூறியுள்ளனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தற்போது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.