சென்னை: திமுக அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சுக்கு, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன தெரியுமா? இதுகுறித்த ஒரு தகவல் நமக்கு ஸ்பெஷலாக கிடைத்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக கொந்தளித்து வருகிறது.. அமித்ஷா முதல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரை கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
"சனாதனம் குறித்து பேசி திமுக மீதுள்ள அதிருப்தியை திசைத்திருப்ப முயலும் உதயநிதி ஸ்டாலின், திமுகவில் சமதர்மம் இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்" என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
உதயநிதி பேச்சு: இதனிடையே, உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் என்ற உத்தரபிரதேச சாமியார் விவகாரமும் வெடித்து கிளம்பி உள்ளது. மற்றொருபக்கம், உதயநிதி ஸ்டாலின் மீது சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர் டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இன்னொருபக்கம் டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் மூத்த தலைவர்கள் குழு எதிர்ப்பு கடிதத்தையும் அனுப்பியிருக்கிறார்கள்.
இப்படி நாலாபக்கமும் உதயநிதிக்கு எதிர்வினைகள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தரப்போ, உதயநிதியின் பேச்சுக்கு வாயே திறக்காமல் இருந்தது.. எதிர்க்கட்சிகளும் இதுகுறித்து கேள்வி எழுப்ப துவங்கிவிட்டன. "காங்கிரஸ் ஏன் மவுனமாக இருக்கிறது? இந்தியா கூட்டணியின் பதில் என்ன? என்று கேள்வி கேட்டது.
சர்வதர்ம சம்பவா: பிறகு 2 நாள் கழித்து காங்கிரஸ் தன் மவுனத்தை கலைத்தது.. செய்தியாளர்களிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசும்போது, "எங்களின் பார்வை என்பது தெளிவாக இருக்கிறது. "சர்வதர்ம சம்பவா" என்ற சித்தாந்தத்தை பின்பற்றி வருகிறோம். அதாவது, "சமதர்ம சமுதாயம்" என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. ஒவ்வொரு கட்சிக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு. அனைவரது நம்பிக்கைகளுக்கும் நாங்கள் மரியாதை அளிக்கிறோம்" என்றார்.
இந்த பதிலானது, இரட்டிப்பு மனநிலைமையை வெளிப்படுத்துவதாக இருந்தது.. உதயநிதிக்கு ஆதரவு தெரிவிப்பது, அதேசமயம் சனாதனத்தையும் எதிர்க்கவில்லை என்பதுபோல காங்கிரஸ் பதிலடி இருந்தது. அப்படியானால், கூட்டணியிலேயே இருந்துகொண்டு, திமுகவுக்கு ஏன் முழு ஆதரவை காங்கிரஸ் தெரிவிக்கவில்லை? என்ற அடுத்த சந்தேகம் கிளம்பியது.. இதுகுறித்த, சில பிரத்யேகமான தகவலும் நமக்கு கிடைத்துள்ளது.
சனாதனம்: அதாவது, சனாதனத்துக்கு எதிரான உதயநிதியின் குரலுக்கு தமிழகத்தில், எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாக மற்ற மாநிலங்களில் எதிர்ப்புகளும் அதிகமாக இருப்பதாக, முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது... இந்தியா கூட்டணியிலும் உதயநிதியின் பேச்சுக்கு ஆதரவு இல்லையாம்.. காங்கிரஸ் தலைவர்களுடன் இது குறித்த ராகுல் காந்தி விவாதித்திருக்கிறார். அப்போது சனாதன சர்ச்சைகளின் சாதக பாதகங்கள் குறித்து, விரிவாகவே அலசப்பட்டுள்ளன.
அப்போது, "உதயநிதியின் பேச்சு தமிழகத்திற்கு தேவை. திராவிட அரசியலில் இருந்து திமுக விலகி விடாது. அதனால் பாஜக- ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை திமுக எதிர்க்கத்தான் செய்யும். அதனை கண்டிக்கவோ விமர்சிக்கவோ முடியாது, கண்டிக்கவும் கூடாது" என்று ப.சிதம்பரம் சொன்னாராம்.. ஆனால், இதனை ராகுல்காந்தி ஏற்க மறுத்துவிட்டாராம்.
ராகுல் காந்தி: "பாஜகவை எதிர்க்க இன்னும் எத்தனையோ பல அரசியல் விஷயங்கள் இருக்கிறது.. அப்படியிருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு தத்துவார்த்த ரீதியிலான பிரச்சனைகளை எடுத்திருக்கக்கூடாது. எதிர்க்கட்சிகளை தாக்குவதற்கு எந்த ஆயுதமும் இல்லாமல் பாஜக தடுமாறிக்கொண்டிருந்த நிலையில், அரசியல் செய்ய அவர்களுக்கு, ஒரு வாய்ப்பை இது ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு விட்டதோன்னு தோணுது" என்று ராகுல் சொன்னாராம் மேலும், உதயநிதியின் பேச்சுக்கு காங்கிரசின் ஒட்டுமொத்த கருத்து என்ன? என்று பாஜக தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டிருப்பதையும், ராகுல் அனைவரிடமும் விவாதித்துள்ளதாக தெரிகிறது.
"திமுகவை பகைத்துக்கொள்ள முடியாது, அதனால் பட்டும்படாமலும்தான் கருத்து தெரிவிக்க வேண்டும்" என்று இறுதியாக அந்த ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டதாம்.
அறிக்கை பின்னணி: இதற்கு பிறகுதான், திமுகவை கோபப்படுத்தி விடாமல், கே.சி.வேணுகோபால் மூலம், "பட்டும்படாமல்" அறிக்கை வாசிக்க வைத்ததாம் காங்கிரஸ் தலைமை" என்று காங்கிரஸ் எம்பிக்கள் மூலம் நமக்கு தகவல் கிடைக்கின்றன. இனி அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!