கடந்த 2019ஆம் ஆண்டில் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்யும் போது, பேசியது சர்ச்சையானது. அதாவது மோடி எனப் பெயர் வைத்த அனைவரும் ஒரே போல இருப்பதாகக் கூறிய, மேலும் ஒரு சர்ச்சை கருத்தை ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இது ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியைக் குற்றவாளி என அறிவித்தது.
ராகுல் காந்தி: மேலும், அவருக்கு அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி எம்பி பதவியை இழந்தார். மேலும், தண்டனை காலம் முடிந்தும் அடுத்த ஆறு ஆண்டுகள், அதாவது ஒட்டுமொத்தமாக அவரால் 8 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில், குஜராத் ஐகோர்ட் இதை டிஸ்மிஸ் செய்தது.
பிறகு அவர் சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தான் கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சூரத் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதற்கான காரணம் விளக்கப்படவில்லை எனக் கூறியது. தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால் ராகுல் காந்தி மீண்டும் தனது எம்பி பதவியைப் பெற்றார். இதையடுத்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலும் கலந்து கொண்ட ராகுல் காந்தி, மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்தும் பேசினார்.
வயநாடு விசிட்: இதற்கிடையே மீண்டும் எம்பி பதவியைப் பெற்ற பிறகு ராகுல் காந்தி முதல்முறையாக மீண்டும் வயநாடு செல்கிறார். இரண்டு நாள் பயணமாக வயநாடு செல்லும் ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக இன்று காலை ராகுல் காந்தி இண்டிகோ விமானம் மூலம் டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக ஊட்டி செல்லும் அவர், பின் வயநாடு செல்கிறார்.
அதன்படி கோவை வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் விமான நிலையத்திலேயே கூடியிருந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ராகுல் காந்தி காரில் ஏறினார். அவரது காரை தொண்டர்கள் சூழ்ந்த நிலையில், கார் மெல்லத் தொண்டர்களைக் கடந்து சென்றது. ராகுலின் பாதுகாப்பு வீரர்கள் கார் செல்ல வழி அமைத்துக் கொடுத்தனர்.
பரபரப்பு: காரில் செல்லும் போது முன்பக்கம் அமர்ந்திருந்த ராகுல் காந்தி தன்னை வரவேற்ற தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கை அசைத்துக் கொண்டிருந்தார். அப்போது உற்சாக மிகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் காரின் அருகில் சென்று ராகுல் காந்திக்குக் கையை கொடுக்க முயன்றனர். அப்போது காருடன் ஓடிச் சென்ற பாதுகாப்பு வீரர்கள், அவர்களைத் தடுத்துத் தள்ளி விட்டனர்.
இதில் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இருப்பினும், பல தொண்டர்கள் ராகுல் அருகே வர முயன்றனர். அப்போது சில பாதுகாப்பு வீரர்கள் அவர்களை அருகில் வர விடாமல் தடுத்தனர். அன்பு மிகுதியில் ராகுல் காந்திக்கு அருகில் வர முயன்ற தொண்டர்களை வீரர்கள் தள்ளியதால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.