சென்னை: தனுஷுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கி மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஜி.வி. பிரகாஷ் மனம் திறந்து அதற்கான காரணம் என்ன என்பதைக் கூறியுள்ளார்.
'வெயில்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் விரைவில் 100 படங்களை நிறைவு செய்ய இருக்கிறார். ஹீரோவாக 25 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். 'சூரரைப் போற்று' படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்திருந்தது. அதனால் தனது 100ஆவது படத்தை சுதா கொங்கராவுடன் தான் இருக்கவேண்டும் என முன்பே முடிவு செய்திருந்தார். அந்தக் கனவு விரைவில் நிறைவேற உள்ளது.
அவர் அளித்துள்ள பேட்டியில் சில திரைப்படப் பாடல்களுக்குப் பின்னால் நடந்த விசயங்களை முதன்முறையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். 'மதராசபட்டினம்' படத்தில் வரும் 'பூக்கள் பூக்கும் தருணம்' பாடல் ஆரம்பத்தில் படத்திலேயே இல்லை என்றும் படக்காட்சிகளைப் பார்த்த பிறகு அதை புதியதாக இணைக்க யோசனை கொடுத்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், 'ஆடுகளம்' படத்தை முதலில் த்ரிஷாவை வைத்துத்தான் படம் தொடங்கப்பட்டது. அதற்காகக் காட்சிகளும் எடுக்கப்பட்டன என்று அவரது கால்ஷீட் ஒத்துவராததால்தான் மீண்டும் டாப்சியை வைத்துப் படத்தை எடுத்தார்கள் எனத் தெரிவித்துள்ள இவர், 'ஒத்த சொல்லால' படத்தின் கருவில் இல்லை. அதைத்தான்தான் சேர்க்கச் சொன்னேன் என்ற உண்மையையும் கூறியிருக்கிறார். முதலில் த்ரிஷாவை வைத்து எடுத்த காட்சிகளை மீண்டும் டாப்சி வைத்து வெற்றிமாறன் ரீ ஷூட் செய்திருக்கிறார்.
இந்தப் பேட்டியில் ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், "முதல் படம் 'வெயிலு'க்காக ஷங்கரிடம் தான் அட்வான்ஸ் வாங்கினேன். அவர், 'காதல் படமே நீ பண்ண வேண்டியது. தவறிவிட்டது. இதைப் பொறுப்பாகச் செய்' என்று சொன்னார். அந்தப் படத்திற்காக 5 டியூன்களை போட்டேன். வேலை நீண்டுகொண்டே போனது. என்னைப் படத்தில் வைப்பார்களா? மாட்டார்களா? என ஒரு சந்தேகம்.
நான் ஒரு டியூன் போட்டு அதை ஓகே சொல்லிவிட்ட பிறகு, பாடலாசிரியர் முத்துக்குமார் போன் செய்து 'செம்மையா ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். அதற்கு ஏற்ப டியூன் போடு' என்றார். நான் இப்போதுதான் முதல் டியூன் ஓகே ஆகி இருக்கிறது. அதற்கு ஏற்ப எழுதிக் கொடுங்கள் என்றேன். அவர் முன்பே எழுதிய பாட்டை அப்படியே மெட்டுக்கு ஏற்ப அமைத்துக் கொடுத்தார். அதுதான் 'வெயிலோடு விளையாடி' பாடல்.
பல பாடல்கள் வெளியான போது பெரிய அளவில் வரவேற்பு இல்லை. கொஞ்சக் காலம் கழித்து அதே பாடல் மீண்டும் பேசப்பட்டுள்ளது. ஆகவே, ஒரு படத்திற்கு ஏற்ப இசையமைப்பதுதான் என் வேலை. தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பதற்காக இசையமைக்க முடியாது. அது இயல்பாக அமையவேண்டும். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு யுவன் தான் முதலில் இசையமைத்தார். படத்தில் ஒரு பாடல்கூட படமாக்கப்பட்டுவிட்டது. அதன்பின் இருவருக்குள் ஏதோ பிரச்சினை. என்னிடம் வந்தார். அந்தக் காட்சிகளுக்கு ஏற்ப பாடலை போடச் சொன்னார். அப்படித்தான் 'உன் மேல ஆசைதான்' உருவானது" என்று கூறியுள்ளார்.
தனது மனைவியைப் பிரிய நேர்ந்த போது எந்தளவுக்கு அந்த அழுத்தம் மனதளவில் வேலைகளைப் பாதித்தது? என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், " சினிமா வாழ்க்கைக்குள் வரும்போதே சொந்த வாழ்க்கை வேறு என்பதையும் தொழில் வேறு என்பதையும் புரிந்து கொண்டுதான் வரவேண்டும். ஒருவேளை சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் தொழிலைப் பாதிக்கிறது எனில் நாம் வீழ்ச்சி அடைந்துவிடுவோம். வேலை என்று வந்தால் சொந்த பிரச்சினையை ஓரங்கட்டி விடுவேன். அப்படியான மனநிலை எனக்கு இருக்கிறது.
நாம் மனதளவில் தளர்ந்துவிட்டால், வேலையைக் கவனிக்க முடியாது. யார் யார் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்பதற்கே நேரத்தைச் செலவிட வேண்டி இருக்கும். நான் அடுத்தவர் தட்டில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கமாட்டேன். என் தட்டில் என்ன இருக்கும் என்பதுதான் முக்கியம்" எனக் கூறியுள்ளார். தனுஷுடன் சில காலம் மன வருத்தத்திலிருந்த ஜி.வி. மீண்டும் இப்போது இணைந்து பணியாற்றத் தொடங்கி இருக்கிறார். அதைப் பற்றிப் பேசும்போது கணவன் மனைவிக்குச் சண்டை வந்த பிறகு மீண்டும் சேர்வதில்லை. நண்பர்களுக்குள் ஏற்படும் கருத்து முரண்பாடுகள் சில ஆண்டுகளில் சரியாக இணைவது இல்லையா? அதைப் போலத்தான் இது என்கிறார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage