இம்பால்: மணிப்பூரில் கடந்த 4 மாதங்களாக கலவரங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கும், ஆசிட் வீச்சு போன்ற தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அரசு ஒப்புதல் கொடுத்திருக்கிறது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க மணிப்பூர் பாஜக அரசு மேற்கொண்ட முயற்சிகள்தான் தற்போது கலவரத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, அம்மாநிலத்தில் 53 சதவிகிதம் உள்ள மெய்டெய் மக்கள் தங்களை பழங்குடி சமூகத்தினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதனை தனது தேர்தலுக்கு பயன்படுத்திக்கொண்ட பாஜக, மெய்டெய் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது.
எதிர்பார்த்தபடி இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. ஆனால், மெய்டெய் மக்கள் தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தினர். ஆனால் பாஜக அரசு மவுனம் காத்தது. எனவே அம்மக்கள் நீதிமன்றத்றை நாடினர். நீதிமன்றமும் இவர்களை பழங்குடியினர் பட்டிலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து இதற்கான பணிகளை அம்மாநில பாஜக அரசு மேற்கொண்டது.
இதுதான் வன்முறைக்கான தொடக்க புள்ளி. பாஜக அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மக்களான குக்கி, நாகா, ஜோ உள்ளிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த மே மாதம் 4ம் தேதி பேரணி நடத்தினர். அதுபோல மெய்டெய் மக்கள் போராட்டம் நடத்தினர். இது இரண்டும் ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது. இதில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 1,108 பேர் படுகாயமடைந்துள்ளனர், 32 பேர் காணவில்லை. பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 200க்கும் அதிகமானோர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கடந்த மே 4ம் தேதி குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வன்முறையாளர்களால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மணிப்பூர் அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்படியாக கலவரம் தொடங்கி 4 மாதங்கள் அன நிலையில், தற்போது கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க மணிப்பூர் மாநில அரசு முன் வந்திருக்கிறது.
கலவரத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ஆசிட் வீச்சால் முகம் சிதைந்தவர்களுக்கு ரூ.8 லட்சம் என நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடங்கி 4 மாதங்களுக்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக மாநில அரசு அறிவித்திருப்பது, மிகவும் காலதாமதமானது என்கிற விமர்சனத்தை பெற்றிருக்கிறது.