சென்னை: தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை முதல் ஆந்திரா எல்லை வரையிலான 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு இப்போது ரூ. 1338 கோடி ஒதுக்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 40இன் ஒரு பகுதியாக அமையும் இந்த திட்டம் அப்பகுதிக்கு முக்கிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தவொரு நாட்டிற்கும் சாலை உட்கட்டமைப்பு ரொம்பவே முக்கியமானது. சாலை உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் மட்டுமே அந்த பிராந்தியத்தின் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.
மேலும், ஓர் இடத்தில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகளை மற்றொரு இடத்திற்குக் குறைந்த செலவில் எடுத்துச் செல்வதிலும் சாலை உட்கட்டமைப்பு ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. இதன் காரணமாகவே தற்போதுள்ள மத்திய அரசு சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை முதல் ஆந்திர எல்லை வரையில் 28 கிமீ தொலைவிலான நெடுஞ்சாலை திட்டத்திற்கு மத்திய அரசு இப்போது நிதி ஒதுக்கியுள்ளது. இது அப்பகுதியின் சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது உடன் பொருளாதார வளர்ச்சியையும் உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவலை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை 40 இல் வாலாஜாபேட்டை/ ராணிப்பேட்டையில் இருந்து தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லை வரை 28 கிமீ தொலைவிலான நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு ரூ. 1,338 கோடியை ஒதுக்கியுள்ளோம். இந்த நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக இருக்கும். மேலும், இரு மார்க்கமும் 2 வழிச் சர்வீஸ் சாலைகளை இது கொண்டிருக்கும். வாலாஜாபேட்டை/ ராணிப்பேட்டைக்கு 10 கிமீ புறவழிச்சாலை, 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இந்த சாலை சென்னை மற்றும் பெங்களூர், திருப்பதி மற்றும் புகழ்பெற்ற வேலூர் சிஎம்சி மருத்துவமனை இருக்கும் வேலூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும். இது BHELஐ ஆதரிக்கும் தோல் மற்றும் சிறிய அளவிலான பொறியியல் உட்பட உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்கும். ராணிப்பேட்டையில் சிறப்புப் பொருளாதார மண்டலம் 2025ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், இந்தத் திட்டம் கணிசமான பொருளாதார வளர்ச்சியை அப்பகுதிக்கு உறுதி செய்கிறது. அதே நேரத்தில் 2-வழிச் சர்வீஸ் சாலை உள்ளூர் போக்குவரத்தை உறுதி செய்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இது Access-Controlled நெடுஞ்சாலையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது நெடுஞ்சாலையை வாகனங்கள் அணுக சில பகுதிகளில் மட்டுமே பாதை இருக்கும். இதன் மூலம் வாகனங்கள் தங்கு தடையில்லாமல் வேகமாகச் செல்ல முடியும்.
என்ஹெச் 40ல் தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை 40 என்பது முன்பு இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் 4 மற்றும் 18 ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலை ஆந்திர மாநிலம் கர்னூல் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 44 சந்திப்பில் தொடங்குகிறது. இது கடப்பா மற்றும் சித்தூர் வழியாக ராணிப்பேட்டை வரை நீள்கிறது.
இந்த நெடுஞ்சாலை ராயலசீமா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏற்கனவே கர்னூல் முதல் கடப்பா வரையிலான பகுதி நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் தான் ராணிப்பேட்டைமுதல் ஆந்திர எல்லை வரையிலான பகுதியையும் 4 வழிச்சாலையாகத் தரம் உயர்த்த மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.