சென்னை: எம்ஜிஆரை கூத்தாடி என்று ஏளனம் செய்த திமுகவை மக்கள் 10 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைத்தார்கள். இன்று மீண்டும் அதே ஏளனத்தை கட்டவிழ்த்து விடும் திமுகவை தமிழக மக்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கி தவெக தலைவர் விஜய்யை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வைப்பார்கள் என தமிழக வெற்றிக் கழக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிலேயே, தனது அரசியல் எதிரி என திமுகவை மறைமுகமாக குறிப்பிட்டார் விஜய். தொடர்ந்து. தான் ஏறும் மேடைகளில் எல்லாம் திமுக அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் விஜய்.
அந்தவகையில், 'எல்லோருக்கான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், மீண்டும் திமுகவை சீண்டினார். "மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத, பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத, கூட்டணி கணக்குகளை மட்டும் நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை இதுதான். கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்." எனப் பேசினார் விஜய்.
தவெக தலைவர் விஜய்யின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் பேச்சு பற்றிய கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை" என கூறினார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கொதித்துப்போய் பேசி உள்ளார்.
"திமுகவின் வரலாறு பற்றி தெரியாமல் நேற்று முளைத்தவர்கள் எல்லாம் சவால் விடுகின்றனா். திமுகவை எதிர்ப்பவர்கள் மண்ணாகி விடுவார்கள். சினிமாவில் மைனஸ் ஆனதால் தான் விஜய் கட்சி ஆரம்பித்துவிட்டார். 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிளஸ் எல்லாம் மைனஸ் ஆகும். மக்களுக்கு என்று இல்லாமல் தொழில் போட்டியால் தான் ஒருவர் கட்சி ஆரம்பித்துள்ளார்" எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திமுகவுக்கு பதில் கொடுக்கப்பட்டுள்ளது. தவெக மாநில செய்தித் தொடர்பாளர் எஸ்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய், மத்திய மற்றும் மாநில ஆட்சியின் அவலங்கள் குறித்து பேசினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதை பற்றி பேசும் போது சினிமா செய்திகள் பார்ப்பதில்லை என்று பதில் கூறியிருப்பது அவரது அரசியல் புரிதலின்மையை காட்டுகிறது.
ஒட்டுமொத்த சினிமாவை கையில் வைத்துக்கொண்டு திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் உதயநிதி, சமூகநீதியை நிலைநாட்டிய அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவை சினிமா செய்திகள் எனக் கூறியிருப்பது அம்பேத்கரை அவமதிக்கும் கருத்தாகும். ஒரு மக்கள் பிரதிநிதி இப்படி பேசுவதென்பது ஏற்க முடியாத செயல்.
அமைச்சர்களின் கருத்தியல் அற்ற விமர்சனம், இணையதள தாக்குதல்கள், ஊடகங்களில் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் ஒரு சிலரை கொண்டு நகைச்சுவையான உண்மைக்கு புறம்பான விஷயங்களை பேச வைப்பது போன்ற செயல்களை செய்வதன் மூலம் திமுக எங்கள் தலைவரின் செயல்பாட்டால் எந்தளவு அச்சத்திலும் பதட்டத்திலும் உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
எம்ஜிஆரை கூத்தாடி என்று ஏளனம் செய்த திமுகவை மக்கள் 10 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைத்தார்கள். இன்று மீண்டும் அதே ஏளனத்தை கட்டவிழ்த்து விடும் திமுகவை தமிழக மக்கள் 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கி தவெக தலைவரை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வைப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage