சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்துப் பேசியது சர்ச்சையாகத் தொடரும் நிலையில், இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, டெங்கு, மலேரியாவைப் போலச் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசியிருந்தார். இது நாடு முழுக்க பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
நாடு முழுக்க இருக்கும் பல அரசியல் தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்: சென்னையில் தணிக்கையாளர் சங்கத்தின் 90ஆவது ஆண்டு விழா கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "அடுத்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட இருக்கிறது அவ்வளவுதான்.. இதில் சிறப்பு என்று எதுவும் இல்லை. இதில் என்ன மசோதாக்கள் தாக்கலாக இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது. அதில் எல்லாம் தெளிவாக இருக்கிறது" என்றார்.
தொடர்ந்து சனாதனம் குறித்த பேசிய அவர், "சனாதனம் குறித்து இங்கே அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார். இதில் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அரசியல் சாசனத்தின்படி உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பிறகே ஒருவர் அமைச்சராகப் பொறுப்பேற்கிறார். பதவி ஏற்கும் போதே இரு தரப்பு மக்களுக்கும் பகைமையை ஏற்படுத்தும் வகையில் பேசக் கூடாது, எந்தவொரு செயலையும் செய்யக் கூடாது என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பிறகே அமைச்சராகப் பொறுப்பேற்கிறோம்.
என்ன சொன்னார்: என்ன தான் கொள்கை என்றாலும் கூட எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் அழிக்கப் போகிறேன் என்று சொல்லும் உரிமை அரசியல் சாசன சட்டப்படியும், பதவியேற்கும் போது ஏற்ற உறுதிமொழி படியும் யாருக்கும் இல்லை. குறிப்பாக ஒரு அமைச்சர் இப்படிப் பேச அதிகாரம் இல்லை. இது மிகவும் தவறான ஒன்று. அவர் என்ன பேசினார் என்று ஊடகங்களிடம் இருக்கிறது.
பொது மேடையில் வைத்து அமைச்சர் என்ன சொன்னார்.. இது சனாதன எதிர்ப்பு மாநாடு இல்லை.. சனாதன ஒழிப்பு மாநாடு என்கிறார். அப்படிப் பேசிவிட்டு இப்போது எதையும் ஒழிக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்கிறார். இப்படியெல்லாம் பேசுவது சரியானதா? நாம் அனைவரும் பேசும் போது பொறுப்பாகப் பேச வேண்டும். பேசும் முன்பு யோசித்துப் பேச வேண்டும்.. உணர்ச்சிவசப்பட்டுப் பேசாமல், என்ன பேசுகிறோம் என்பதை யோசித்துப் பேச வேண்டும்..
ரொம்ப தவறு: அதே மேடையில் அறநிலையத்துறை அமைச்சரும் இருக்கிறார். அவரை வைத்துக் கொண்டே ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதையும் அவர் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள். இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்.. இந்து பக்தர்கள், சனாதன பக்தர்கள் உண்டியலில் பணத்தைப் போடுகிறார்கள். அந்த பணம் மட்டும் வேண்டுமா.. அது மட்டும் நன்றாக இருக்கா.. இப்படிப் பேசிவிட்டு அதற்கு ரியாக்ஷன் இருக்க என எதிர்பார்ப்பது தவறு..
அவதார புருஷனான ராமரின் கழுத்தில் செருப்பு அணிவித்து ஊர்வலம் நடத்தினார்கள். அதற்கு எந்தவொரு பதிலடியும் கிடைக்கவில்லை. இப்படி எந்தவொரு வன்முறையும் இருக்கக் கூடாது என்றே சொல்கிறேன். வன்முறைக்கு எப்போதும் வன்முறை பதிலாக இருந்தது இல்லை.. எதுவாக இருந்தாலும் வன்முறை இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
முதுகெலும்பு இல்லாதவர்கள்: நீங்கள் எந்தளவுக்கா இகழ்ச்சியாகப் பேசினாலும்.. அவர்கள் அவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.. அதுவே சனாதன தர்மம். இவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதாலேயே இதுபோல தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர்கள் வேறு எந்த மதம் குறித்தாவது பேசி இருக்கிறார்களா.. அதற்கு முதுகெலும்பு இல்லாதவர்கள்.. மற்ற மதங்களில் குறைகளே இல்லையா.. அவை குறித்துப் பேசத் தைரியம் இருக்கா?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.