மும்பை: உலகின் கோடீஸ்வர பிச்சைக்காரர் பாரத் ஜெயின் இந்தியாவில் மும்பையில் இருக்கிறார். அவரது மாத வருமானம் 75 ஆயிரம் ஆகும். அவரது சொத்து மதிப்பு 7.50 கோடியாகும். ₹1.4 கோடி மதிப்புள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்துள்ளார். தானேயில் இரண்டு கடைகள் அவருக்கு சொந்தமாக இருக்கிறது. அதில் இருந்து வாடகை மட்டுமே மாதம் 30 ஆயிரம் வருகிறது.. பிச்சை எடுத்த பணத்தை, திறமையான நிர்வாகத்தால் ஜெயின் கோடீஸ்வரன் ஆனது எப்படி என்பதை பார்ப்போம்.
இன்றைக்கு ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே உழைத்து சம்பாதித்தாலும் வாழ்க்கையை நடத்துவது சிரமம். குறைந்தது கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போக வேண்டும். இருவரும் நல்ல வேலைக்கு சென்று சம்பாதித்தால் தான் சராசரியான வாழ்க்கையே வாழ முடியும் என்கிற நிலை இருக்கிறது.. இன்றைய வாழ்க்கை முறையில் சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி உள்பட பெருநகரங்களில் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவோர் கூட வீடு வாங்குவது என்பது எளிதானது அல்ல.. ஆனால் மும்பையில் ஒரு பிச்சைக்காரருக்கு 7.50 கோடி மதிப்புள்ள சொத்து இருக்கிறது. மும்பையில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் வைத்துள்ளார். இவரது மாத வருமானம் 75000 ரூபாய் ஆகும். உலகின் கோடீஸ்வர பிச்சைக்காரராக கருதப்படும் பாரத் ஜெயின் பற்றி பார்ப்போம்.
மும்பை மாநகரம் இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக இருக்கிறது. இங்கு எப்போதுமே மக்கள் பரபரப்பாக ஓடுகிறார்கள். மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரயில் நிலையம் மற்றும் ஆசாத் மைதானத்தின் பரபரப்பான சாலைகளுக்கு மத்தியில், பாரத் ஜெயின் (54 வயது) தனித்துவமாக தெரிகிறார். அவர் சேர்த்த பணத்துக்காக அல்ல. அவர் பிச்சை எடுத்த அந்த பணத்தை சேர்த்ததற்காக.. உலகின் பணக்கார பிச்சைக்காரராக கருதப்படும் பாரத் ஜெயின், பிச்சை எடுத்தாலும், தனது திறமையான நிர்வாக முறையால், ஒரு அசாதாரண நிதி வெற்றியாளாக மாறியுள்ளார். இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களை விடவும் அதிகம் சம்பாதித்து சொத்து சேர்த்துள்ளார்.
பாரத் ஜெயின் பிறக்கும்போதே வெள்ளிக் கரண்டியுடன் பிறக்கவில்லை, அவருடைய குடும்பம் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்திருக்கிறது. அவருக்கு ஒருவேளை உணவு தரக்கூட முடியாத நிலை தான் இருந்திருக்கிறது. சொந்தமாக வீடும் இல்லை.. குடிசையில் வாடகை கொடுத்து வாழவும் வழியில்லை.. படிக்கவும் இல்லை.. ஆனாலும் பாரத் தனது தலைவிதியை திறமையான நிதி நிர்வாகத்தால் மாற்றிக்கொண்டார், இன்று அவர் கூறிய தகவல்களின்படி, 7.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து அவருக்கு இருக்கிறது. இதில் பல சொத்துக்கள் மற்றும் வருமானம் அடங்கும். ஆபிஸ்க்கு வேலைக்கு செல்லும் சராசரி மக்களுடைய வருமானத்தைவிட அதிகமாக இருக்கிறது.
இவர் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகில் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார். தினமும் 12 மணி நேரம் பிச்சை எடுக்கிறார். அதன் மூலம் தினசரி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 வரை கிடைக்கிறதாம். இதன் மூலம் மாதத்திற்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை வருமானம் பார்க்கிறார் பாரத் ஜெயின்.
பிச்சை எடுத்து சேர்த்து வைத்த பணத்தை வீணடிக்காத பாரத் ஜெயின் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடு வாங்கி உள்ளார். அதில் ஒரு வீட்டில்தான் அவரது குடும்பம் வசித்து வருகிறது. இதுதவிர 2 கடைகளையும் பாரத் ஜெயின் பிச்சை எடுத்து சேமித்த பணத்தில் வாங்கியுள்ளார் . அந்த கடைகள் மூலம் மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. அவரது 2 பிள்ளைகளும் மிகவும் காஸ்ட்லியான ஆங்கில தனியார் பள்ளியில் படித்து முடித்துள்ளார்கள். அவரது குடும்பத்தினர், இனியும் பிச்சை எடுக்க வேண்டாம் என்று கூறினாலும் பாரத் ஜெயின், தொடர்ந்து பிச்சை எடுத்து வருகிறார். கோடிகளில் சொத்து சேர்த்துள்ள பாரத் ஜெயின், இதுபற்றி கூறும் போது, 'நான் பேராசைக்காரன் இல்லை. நான் தாராளமாக வாழ்கிறேன். கோவில்களுக்கு கூட நன்கொடை தருகிறேன்' என்றார்.
இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை பிச்சை எடுக்கும் தொழிலில் பணம் புரள்கிறது. பாரத் ஜெயிக்கு 7.50 கோடி சொத்து மதிப்பு என்றால், மும்பையை சேர்ந்த சம்பாஜி காலே என்ற பிச்சைக்காரருக்கு சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும். லட்சுமி தாஸ் என்பவருக்கு சொத்து மதிப்பு ரூ.1 கோடி ஆக உள்ளது.