சென்னை: மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டுவிடவில்லை; தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசானது பல்லுயிர் மற்றும் தமிழர் வரலாற்றுப் புராதான சின்னங்களைப் பாதுகாக்க ஒரு சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலமே டங்ஸ்டன் திட்டத்தைத் தடுக்க முடியும் என்று பூவுலகின் நண்பர்கள் என்கிற சுற்றுச் சூழல் அமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் கனிம வள அமைச்சகம் கடந்த 07.11.2024 அன்று ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிட்டட் நிறுவனத்திற்கு , மதுரை மேலூர் தாலுக்காவில் உள்ள நாயக்கர்பட்டி உள்ளடங்கிய பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை (Composite License) சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ வழங்கியது. இந்த அனுமதியானது மேலூர், தெற்குத்தெரு, முத்துவேல்பட்டி, கூலானிபட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், அரிட்டாபட்டி, வள்ளலாப்பட்டி, சில்லிப்பியபட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளடங்கிய 2015.51 ஹெக்டர் (சுமார் 4980 ஏக்கர்) நிலபரப்பில், டங்ஸ்டன் எடுப்பதற்கான அனுமதியை உள்ளடக்கியது.
மேலூர் தாலுகாவில் உள்ள இந்தப் பகுதி உயிர்ப்பன்மையம், வரலாறு, பண்பாடு மற்றும் தொல்லியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசாங்கம் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய பகுதியில் உள்ள சுமார் 193.215 எக்டர் அளவிலான நிலப்பகுதியை உயிர்ப்பன்மையச் சட்டம்,2002'ன் கீழ் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவித்தது. இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இப்போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் , தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை 09.12.2024 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியது.
இந்நிலையில் 24.12.2024 அன்று மத்திய அரசின் கனிமவள அமைச்சகம் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்
- டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பல்லுயிர்ப் பெருக்கம் சார்ந்த பகுதிகளைத் தவிர்த்து மீதமுள்ள பகுதிகளில் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான ஆய்வுகளையும் திட்ட எல்லைகளை மறு வரையறை செய்யவும் GSIக்கு ஆணையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
- அதுவரை இத்திட்டத்திற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை (Letter of Intent) தமிழ்நாடு அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் மூலம் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மேலூர் தாலுகாவில் நடைமுறைப்படுத்தவே மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
உயிர்ப்பன்மைய வளமிக்கப் பகுதிகளைத் தவிர்த்து மீதமுள்ள பகுதிகளில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தபட்டால் நிச்சயம் BHS என அறிவிக்கப்பட்ட பகுதியும் பாதிப்புக்குள்ளாகும். மேலும் வரலாற்று சிறப்புமிக்க புராதானச் சின்னங்களை பாதுகப்பதற்கான எந்த அறிவிப்பும் இந்த அறிக்கையில் இல்லை. எனவே இந்தத் திட்டம் முற்றிலுமாக கைவிடப்படுவதின் மூலம் மட்டுமே மதுரை மேலூர் தாலுகாவில் உள்ள தொல்லியல் சின்னங்களும் உயிர்ப்பன்மைய வளங்களும் பாதுகாக்கப்படும்.
ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து மக்களின் கோரிக்கைக்கு இணங்க காவிரி டெல்டா மண்டலத்தில் உள்ள ஆறு மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, 'தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின்' கீழ் 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
மேலும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எட்டு வகையான அபாயகரமான தொழிற்சாலைகள் இந்தப்பகுதிகளில் தடை செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழாகவும், மேற் கூறிய ஆறு மாவட்டங்களில் இந்த எட்டுவகையான தொழிற்சாலைகளை நிருவுவதற்கான தடையும் பிறப்பிக்கப்பட்டது . இதன் காரணமாகவே மத்திய அரசின் கனிம வள அமைச்சகத்தின் அனுமதியை பெற்ற பின்பும் ஹைட்ரோகார்பன் திட்டம் நடைமுறைப் படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.
எனவே மதுரை மேலூர் தாலுக்காவில் உள்ள பல்லுயிர் மற்றும் தமிழர் வரலாற்றுப் புராதான சின்னங்களைப் பாதுகாக்க ஒரு பிரத்யேகச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் தமிழ் நாடு முதலமைச்சர் மு..க ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.