செயற்கை கருத்தரித்தல், வாடகை தாய்.. தனியார் கருத்தரித்தல் மையம் போறீங்களா.. வேலூர் சம்பவம் தெரியுமா?

post-img
வேலூர்: வேலூர் சத்துவாச்சாரியில் தம்பதிக்கு திருமணமாகி சில ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் வேலூரில் உள்ள பிரபல தனியார் கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சைக்காக நாடியுள்ளனர். ஆனால் அந்த தனியார் மருத்துவ மையம் பொய்யான வாக்குறுதி அளித்து சிகிச்சை அளித்து பல லட்சம் பணம் பறித்தாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு இழப்பீடு வழங்க வேலூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் அவர்கள் வேலூரில் உள்ள தனியார் கருத்தரித்தல் சிகிச்சை மையத்தை நாடி உள்ளனர். அவர்கள் இருவரையும் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு செயற்கை முறையில் கருத்தரித்தல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் கூறினார்களாம். அதற்காக அவர்கள் கவுன்சிலிங் மற்றும் பரிசோதனைகளை குறிப்பிட்ட தனியார் கருத்தரித்தல் சிகிச்சை மையத்தில் மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்யவில்லை என்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் கூறி உள்ளனர். இந்த சிகிச்சைக்காக முன்கூட்டியே பல லட்சம் பணத்தை வேலூர் தனியார் கருத்தரித்தல் மையம் பெற்றுள்ளதாம். தொடர்ந்து தம்பதிக்கு கவுன்சிலிங் மற்றும் இதர பரிசோதனைகள் மேற்கொண்டு வந்த நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற வேண்டும் என்றால் நீதிமன்றத்தை அணுகி அதன் பின்னரே மேற்கொள்ள முடியும் என்று டாக்டர்கள் கடைசியில் கைவிரித்துவிட்டார்களாம். தனியார் கருத்தரித்தல் மையத்தால தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக அதிர்ச்சி அடைந்த தம்பதியினர், இதனை முன்கூட்டிய தெரிவித்திருந்தால் இவ்வளவு பணம் செலவு ஏற்பட்டிருக்காதே என்று கேட்டுள்ளனர். மேலும் தாங்கள் வழங்கிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு தெரிவித்தனர். ஆனால் சிகிச்சை மையத்தினர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தம்பதியினர் வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள. வேலூர் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி சுந்தரம் தம்பதிகளின் மனுவை விசாரணை மேற்கொண்டார். அப்போது சிகிச்சைக்காக ரூ.10 லட்சம் வரை செலவாகி விட்டதாக மையத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர் விசாரணையில், தம்பதிக்கு ஆரம்ப கட்ட சிகிச்சை முறைகள் மட்டுமே மேற்கொண்டதும், செயற்கை முறை கருத்தரித்தல், வாடகைதாய் சிகிச்சைக்கு என அடுத்தக்கட்ட சிகிச்சை மேற்கொள்ளாததும், சிகிச்சை மையத்தினர் சுமார் ரூ.14 லட்சம் வரை பணத்தை பெற்றுள்ளதும் தெரியவந்தது. மேலும் தம்பதிக்கு ஏற்கனவே இதே கருத்தரித்தல் சிகிச்சை மையத்தின் மற்றொரு சென்னை கிளையில் செயற்கை முறையில் கருத்தரித்தல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதில் தோல்வி அடைந்த விவரமும், வேலூர் கிளை மையத்திற்கு தெரிந்தும் பொய்யான வாக்குறுதி வழங்கி சிகிச்சை மேற்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட தம்பதி செலுத்திய தொகையில் இருந்து 50 சதவீதத்தை திருப்பி வழங்க வேண்டும் என்றும், பொய்யான வாக்குறுதி வழங்கி தம்பதிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.50 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவின தொகையாக ரூ.25 ஆயிரமும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி மீனாட்சி சுந்தரம் உத்தரவிட்டார். மேலும் கருத்தரித்தல் சிகிச்சை மையத்தினர் தம்பதியிடம் பெற்றுக் கொண்ட தொகையில் மீதம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலவழிக்கப்படாமல் இருந்தது தெரிய வந்த நிலையில், அந்த தொகையையும் திருப்பி வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post