அசோக்செல்வன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘நித்தம் ஒரு வானம்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘போர் தொழில்’. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திருச்சியில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் ஒரே மாதிரி கொலை செய்யப்படுகிறார்கள். காவல் துறையினருக்கு கொலை குறித்து எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதனையடுத்து சீனியர் காவல்துறை அதிகாரியான சரத்குமார் மற்றும் புதிதாக பணிக்கு சேர்ந்த அசோக் செல்வன் இந்த கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்படுகிறார்கள். அனுபவ அறிவுடன் சரத்குமாரும் புத்தக அறிவுடன் அசோக் செல்வனும் அந்த கொலையை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை.
தேவையில்லாத காட்சிகளை நிரப்பி வீணடிக்காமல் துவக்கத்திலிருந்தே கதைக்குள் அழைத்து சொல்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. வழக்கமாக தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட மர்டர் மிஸ்ட்ரி கதை தான். அதை சொன்ன விதத்தில் வித்தியாசப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் ஆல்ஃப்ரெட் பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ராஜா கூட்டணி.
ஜூன் மாதம் 9-ம் தேதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலக அளவில் ரூ.50 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாக கடந்த வாரம் இதன் விநியோகஸ்தர் தெரிவித்திருந்தார்
இந்நிலையில், ஜூலை 7-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது. ஆனால், திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் குவித்து வருவதால், ஓடிடி ரிலீஸ் தேதியை தள்ளிவைக்குமாறு தயாரிப்பு நிறுவனம், சோனி நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டது. இதனால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தப் படம் சோனி லைவ் தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.