சென்னை: விஜய் பங்கேற்கும் புத்தக விழாவில் கலந்து கொள்வதற்காக விதிமுறைகள் மிகக் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளதாகப் பரவலாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூலை வெளியிட இருக்கிறார். அந்த விழாவுக்கு அவரது கட்சி நிர்வாகிகள் பல மாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ளனர். முதலில் இந்நூலை திருமாவளவன் வெளியிடுவதாகவே இருந்தது. ஆனால், திமுக கூட்டணிக்குள் இதைக் கொண்டு ஏதேனும் சலசலப்பு உருவாகும் என்று நினைத்த அவர், விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்த்திருக்கிறார்.
விஜய் வெளியிட்டால் என்ன? அவரது கருத்தை அவர் பேசப்போகிறார். திருமாவளவன் அவரது கருத்தை முன்வைக்கப் போகிறார். இன்னும் சொல்லப் போனால் பெரியாரை தலைவராக அறிவித்து விஜய்யுடன் திருமாவளவன் கரம் கோர்த்து நிற்கவேண்டும் என்று ஒரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.
இந்த விழாவில் விஜய்யுடன் முன்னாள் நீதிபதி சந்துரு பங்கேற்கிறார். அம்பேத்கர் பேரன் ஆனந்த டெல்டும்ரே கலந்து கொள்கிறார். விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு நூல் உருவாக்கம் பற்றி பேசி இருக்கிறார். இதை வாய் ஆஃப் காமன் என்ற அவரது நிறுவனமும் இணைந்து வெளியிடுகிறது. ஆனால், அழைப்பிதழில் விசிக துணைப் பொதுச்செயலாளர் என்று கட்சியின் பொறுப்பை ஆதவ் அர்ஜுனா போட்டுக் கொள்ளாமல் அதைத் தவிர்த்து இருக்கிறார். அவரது நிறுவனத்தின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
திருமாவளவன் பங்கேற்கவில்லை என்றாலும் கட்சிப் பதவியை அவர் ஏன் தவிர்க்கவேண்டும் என்ற கேள்வியையும் சிலர் முன்வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது விஜய் மற்றும் திருமாவளவன் பங்கேற்பது பற்றிய விவாதம் நடைபெற்றுவந்த நிலையில், இப்போது அந்த அழைப்பிதழில் கூறிப்பட்டுள்ள விதிமுறைகள் பற்றி பலரும் விவாதித்து வருகின்றன.
அதாவது ஒருநுழைவு சீட்டில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று சொல்லப்பட்டுள்ளது. அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. வழக்கமாக அனைத்து விழாக்களிலும் அதுதான் நடைமுறை. ஆனால், சிறப்பு விருந்தினர்கள் தவிர வரும் பார்வையாளர்கள் கம்பி வேலிக்குப் பின்புறமே அமரவைக்கப்படுவர் என்று சொல்லப்பட்டுள்ளது. இது சிறப்பு விருந்தினர்களின் பாதுகாப்புக் காரணத்திற்காக என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதையும் கூட நெட்டிசன்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
நுழைவு வாயில் மட்டும் அனைத்து இடங்களிலும் சோதனைக்கு ஒத்துழைக்கவும் நிகழ்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கோஷமிடுவோர், ஒலி எழுப்புவோர் வெளியேற்றப்படுவர் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை வழக்கமாகப் பல நிகழ்ச்சிகளில் நேரடியாக தெரிவிக்காமல் செய்வார்கள். இவர்கள் முன்கூட்டியே சொல்லி இருக்கிறார்கள். அதைப் பற்றியும் யாரும் விவாதிக்கவில்லை. நிகழ்ச்சி கட்டுக்கோப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக அதைக் கூறியுள்ளனர்..
ஆனால், குடிக்கக் குடிநீர்கூட பங்கேற்பவர்களே கொண்டுவரவேண்டும் என ஒரு விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. அதைத்தான் நெட்டிசன்கள் குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்கமாட்டீர்களா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் மற்றொரு அதிர்ச்சியான விதிமுறையும் இடம்பெற்றுள்ளது. மீறி படம் அல்லது வீடியோ எடுத்தால் அந்த சாதனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் கட்டளைப் போட்டுள்ளனர். அதேபோல் வரும் நபர்களின் பாதிப்புக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
வாய்ஸ் ஆஃப் காமன் என்று அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில் அனைவரது குரலுக்குச் சம உரிமை அளிக்கவேண்டும் இல்லையா? எனச் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், சமூக ஊடகங்களில் விஜய் மற்றும் தவெக தொண்டர்கள் இதை மிகப்பெரிய வாய்ப்பாகவே கருதுகின்றனர். தங்களின் தலைவர் அனைத்து மக்களையும் சமமாகவே கருதுகிறார். அவர் ஆட்சிக்கு வந்தால் நல்ல மாற்றம் வரும் என்று கருத்திட்டு வருகின்றனர். விழா நடைபெறும் இடத்தில் கூடிய நிர்வாகிகள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.
விக்கிரவாண்டி மாநாட்டுக்குப் பிறகு விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி இது. அதேபோல் அவர் கட்சியின் கொள்ளை தலைவர்களில் ஒருவராக அம்பேத்கர் இருக்கிறார். அவர் குறித்தும் அவரது கொள்கையில் தன்னை எந்தக் கருத்துகள் ஈர்த்தன என்பது பற்றியும் விஜய் பேசுவார். அதைவைத்து விரைவில் பல விவாதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage