பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் தமிழ் புத்தகத் திருவிழா நடக்கிறது. நேற்று இந்த புத்தக திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தொடங்கி வைத்தார். நேற்று தொடங்கிய புத்தக திருவிழா வரும் 29 ஆம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சிறப்பு தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தமிழ் சங்கத்தில், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ் புத்தக திருவிழாவை முதல் முறையாக நடத்தியது. அப்போது இந்த புத்தக திருவிழாவுக்கு மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் இந்த புத்த திருவிழா நடந்தது.
இந்த நிலையில் 3 வது ஆண்டாக நேற்று கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில், வசந்த் நகர் அருகேயுள்ள, பெங்களூர் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் (The Institution of Engineers, India Karnataka State Centre, Dr. B. R. Ambedkar Veedhi) வளாகத்தில் இந்த புத்த திருவிழா தொடங்கியது. வரும் 29 ஆம் தேதி வரை இந்த புத்தக திருவிழா நடக்கிறது. புத்தகம் வாசிக்கும் பழக்கம் மற்றும் படிப்பவர்கள் தங்கள் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக நடக்கும் இந்த புத்தக திருவிழாவில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. தமிழின் முன்னணி பதிப்பகங்கள் இங்கு ஸ்டால்கள் அமைத்துள்ளன. தமிழ் புத்தகங்கள் மட்டுமின்றி, கன்னடம், ஆங்கில புத்தகங்களும் தள்ளுபடி விலையில் இங்கு கிடைக்கின்றன..
தமிழ் ஐஏஎஸ் அதிகாரியும், பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவருமான ராம்பிரசாத் மனோகர் தலைமையில் நடக்கும் மூன்றாம் ஆண்டுக்கான புத்தக திருவிழாவை நேற்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நேற்று துவக்கி வைத்தார். புத்தக திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று காலை 10 மணி முதல் 10.45 மணி வரை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தமிழ் மொழித்திறன் போட்டிகள் தொடக்கவிழா நடந்தது.
இந்த விழாவுக்கு ஓய்வு பெற்ற சுங்கத்துறை இயக்குனர் திரு கோ மணிவாசகம் தலைமை வகித்தார். விழாவை மேற்கு வங்க மாநில அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு கோ பாலச்சந்திரன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பேராசிரியர் வி தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினார். தமிழாசிரியை திருமதி சுமதி நன்றியுறை ஆற்றினார். த இலட்சுமிபதி, அ மதுசூதனபாபு, அ வரதரஜன், ஜான் ஃபிராங்க் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
தொடர்ந்து வெற்றி அரங்கம் என்ற பெயரில் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இஸ்ரோவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சந்திரசேகர் தலைமையில் இந்த பரிசளிப்பு விழா நடந்தது. நம்ம ஊர் தமிழ் மக்கள் குழு தலைவர் த. கோவலன் பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார். ஆசிரியர் மஞ்சுளா வரவேற்புரையும், வேல்ஸ் உலகளாவிய பள்ளி தமிழாசிரியை நந்தினி நன்றியுரையும் ஆற்றினார்.
இதனை தொடர்ந்து இன்று மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை பாராட்டரங்கம் நடக்கிறது. சிறந்த தமிழ் நூல் போட்டிப் பரிசளிப்பு விழா நடக்க இருக்கிறது. இதற்கு பெங்களூர் மாநகராட்சிப் புகுமுக கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் பொன். க. சுப்பிரமணியன் தலைமை ஏற்கிறார். கர்நாடக அரசின் தொழில் மற்றும் வணிகத்துறையின் முதன்மைச்செயலாளர் டாக்டர் எஸ் செல்வக்குமார் ஐஏஎஸ் சிறப்புரை ஆற்றி பரிசுகளை வழங்க இருக்கிறார். பேராசிரியர் தி சரசுவதி வரவேற்புரையும், பேராசிரியர் அமுதா நன்றியுறையாற்ற உள்ளனர். பேராசிரியர்கள் உ பசவராஜ் மற்றும் ஆரோக்கியமேரி வாழ்த்துரையாற்ற உள்ளனர்.
தொடர்ந்து மாலை 6.00 முதல் இரவு 7.00 மணி வரை "தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்தும் தமிழர் தொன்மை" என்ற தலைப்பில் இலக்கிய மாலை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. கர்நாடக அரசின் காவல்துறை டிஜிபி எஸ் முருகன் ஐபிஎஸ் தலைமை ஏற்கிறார். தொல்லியல் ஆய்வறிஞர் அமர்நாத் இராதாகிருஷ்ணன் சிந்தனையுரையாற்றுகிறார். கட்டுரையாளர் பொறியாளர் நித்யகல்யாணி வரவேற்புரையாற்றுகிறார். பாரதிதாசன் தமிழ் மறுமலர்ச்சி மன்றம் இணை ஒருங்கிணைப்பாளர் மா கார்த்தியாயினி நன்றியுரையாற்றுகிறார்.
நடப்பு ஆண்டில் புது முயற்சியாக பழைய புத்தகங்களை நன்கொடையாக இந்த புத்தக திருவிழாவில் கொடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.500 செலுத்தி 10 பழைய புத்தகங்கள் வாங்கி கொள்ளலாம். இதேபோன்று, இலவச கண் பரிசோதனை முகாம், சித்த மருத்துவ முகாமும் நடக்கிறது. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை அடையாளப்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளனர். வரும் 29 ஆம் தேதி வரை இந்த புத்தக திருவிழா நடக்கிறது குறிப்பிடத்தக்கது. கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்க தலைவரும், மூத்த இதழியலாளருமான முத்துமணி நன்னன், இந்த புத்தக திருவிழாவிற்கு குடும்பம் குடும்பமாக வருமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.