நவ கிரகங்களில் சுப கிரகமாக கருதப்படும் குரு, நேற்றிரவு 11.27 மணியளவில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதனையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பகவானுக்கு பால், மஞ்சள், இளநீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதே போன்று, தஞ்சாவூர் மாவட்டம் திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோயிலில் தனி சன்னதியில் உள்ள மங்கள குருவிற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பட்டு வஸ்திரங்கள், நவதானியங்கள், பழ வகைகள் கொண்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த குருபகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் கோயிலில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறையில் வதான்யேஸ்வரர் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க கவசம் சாற்றி வழிபாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பஞ்சமுக அர்ச்சனை, மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் காயாரோகனேஸ்வரர் கோயிலில், மேளதாளங்கள் ஒலிக்க சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குருபகவான், யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.