சென்னை: மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான் கஞ்சா பயன்டுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தகவல் கிடைத்துள்ளது. போதைப் பொருள் வழக்கில் கைதானவர்களில் தனது மகனின் போன் நம்பர் இருந்ததால் அவரை கைது செய்ததாக மன்சூர் அலிகான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஜெ.ஜெ. நகர் காவல் நிலைய பகுதியில் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார், கடந்த 3 ஆம் தேதி பாரிசாலை இ.பி. பூங்கா அருகே சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (21) என்ற கல்லூரி மாணவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் அவரிடமிருந்து 17 எல்எஸ்டி ஸ்டாம்ப் போதை பொருளும், 3 கிராம் கஞ்சாவையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் ரெடிட் ஆன்லைன் ஆப் மூலம் போதை பொருளை வாங்கி அதை பயன்படுத்திவிட்டு அதிக விலைக்கும் அவர் விற்பனை செய்தது தெரியவந்தது. கார்த்திகேயன் கொடுத்த தகவலின்படி மந்தைவெளியைச் சேர்ந்த அரவிந்த் பாலாஜி (20), கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வத்சல் (21), மறைமலைநகரை சேர்ந்த திரிசண் சம்பத் (20) ஆருணி உள்பட 10 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 700 கிராம் கஞ்சா, போதை மருந்துகள், 5 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் கைதான கார்த்திகேயனின் மொபைல் நம்பரை ஆய்வு செய்தபோது அதில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் எண் இருந்தது. அது போல் அவருடைய நண்பர்களுடனும் கார்த்திகேயன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த 7 பேருக்கும் பரிசோதனை முடிவில் அலிகான் துக்ளர், கார்த்திகேயனிடமிருந்து போதை பொருட்களை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.
மேலும் துக்ளக், அவரது நண்பர்களுடன் இணைந்து மற்ற நபர்களுக்கும் வாங்கிக் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து துக்ளக் (26), அவரது நண்பர்கள் என மொத்தம் 7 பேர் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெ.ஜெ.நகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து அந்த 7 பேரையும் அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மேற்கண்ட 7 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.
அதன் பேரில் 7 பேரையும் நீதிமன்றத்தில் இருந்து வேனில் ஏற்றினர். அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்லும் போது மன்சூர் அலிகான், வேனை சுற்றி வந்து, கஞ்சா எல்லாம் அடிக்கக் கூடாது. ஏன் தப்பு பண்ற, தைரியமா இரு, புத்தகம் படி, தெம்பா இரு, கஞ்சா குடிச்சா கவர்மென்ட் அரெஸ்ட் பண்ணும் தெரியாதா என அறிவுரை வழங்கினார்.
மேலும் அம்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் மன்சூர் அலிகான் , செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கஞ்சா வியாபாரியிடம் என் மகனின் எண் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். என் தொலைபேசியிலும் கூடத்தான் பல நடிகைகளின் நம்பர்கள் உள்ளன. பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து இடங்களிலும் போதை பொருள் எப்படி கிடைக்கிறது, டாஸ்மாக்கை ஒழியுங்கள் என ஆவேசமாக பேசினார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகானின் மகன் கஞ்சா பயன்படுத்தியதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதானவரின் செல்போனில் தனது மகனின் போன் நம்பர் இருந்ததால் கைது செய்துவிட்டார்கள் என மன்சூர் அலிகான் கூறியிருந்தார்.
ஆனால் துக்ளக்கிற்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருடைய ரத்தத்தில் cannabinoids அதாவது கஞ்சா கலந்திருப்பது உறுதியாகியுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage