திண்டுக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போதிய வருமானம் இல்லாததால் நிறைய பேர் தொழிலை விட்டு சென்று விட்டதாலும், இடைத்தரகர்கள் தலையீடாலும் தங்களுக்கு லாபம் கிடைக்கவில்லை எனவும், வாங்கிய கடனை அடைக்கவே சரியாக போய் விடுகிறது என கூறுகின்றனர் குயவர்கள்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மண்பானை தயாரித்தல், கரும்பு அறுவடை பணிகள் துவங்கியிருக்கின்றன. பொங்கல் என்றாலே மண்பானையில் பொங்கல் வைத்து கடவுளுக்கு படையெடுத்து வழிபடுவது வழக்கம்.
உண்மையில் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது? என ஒன் இந்தியா தமிழ் நேரடியாக களத்தில் இறங்கி குயவர்களுடன் உரையாடியது. அவர்கள் பகிர்ந்து கொண்ட சில விஷயங்களை பார்ப்போம்..
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டாரத்தில் பறைப்பட்டி, சாணர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் மண்பானை, மண்பானை பாட்டில், மண்ணாலான டம்ளர், ஆகியவற்றை செய்து வருகின்றனர். குளங்கள் மற்றும் குட்டைகளில் கிடைக்கும் களிமண் மூலம் மண்பானையை தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக நத்தம் அருகே கோபால்பட்டி அடுத்துள்ள தி.பாறைப்பட்டி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொங்கல் பானைகள், திண்டுக்கல், நத்தம், கொட்டாம்பட்டி, வேடசந்தூர், மதுரை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. தி.பாறைப்பட்டியில் பொங்கல் பானைகள் மட்டுமின்றி, கலயம், குழம்பு சட்டி, ஜாடி, குடம் உள்ளிட்ட மண் பொருள்களும் தயார் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தி.பாறைப்பட்டி பகுதியிலிருந்து சுமார் 20ஆயிரம் மண் பானைகள் பொங்கலிடுவதற்காக வியாபாரிகள் தரப்பில் கார்த்திகை மாதம் முதலே கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் மார்கழி மாதம் பிறந்தும் கூட இதுவரை வியாபாரிகள் வராததால் மட்பாண்ட தொழிலாளர்கள் உற்சாகம் இழந்துள்ளனர்.
இதுதொடர்பாக மட்பாண்ட தொழிலாளிகள் கூறும் போது, கடந்த 50 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இத்தொழிலுக்கு பிரதான தேவையான களிமண்ணை கனமழை காரணமாக கண்மாயிலிருந்து எடுக்க முடியவில்லை. இந்த நெருக்கடிக்கு இடையே பலர் தொழிலை விட்டே சென்று விட்டனர். எங்கள் ஊரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த தொழிலை செய்து வந்தோம். ஆனால் தற்போது 10 முதல் 15 பேர் வரை மட்டுமே மண்பானை தொழிலில் ஈடுபட்டுள்ளோம். போதிய வருமானம் இல்லாததால் என் மகன்கள் கூட கட்டிட வேலைக்கும், ஓட்டல் வேலைக்கும் சென்றுள்ளனர்.
மேலும் மலை காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்த தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. வியாபாரிகள் வருகை இல்லாததால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மட்பாண்ட பொருள்கள் கூட விற்பனையாகமல் தேக்கம் அடைந்துள்ளன. கடந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலேயே, சுமார் 10ஆயிரம் பொங்கல் பானைகள் விற்பனையாகிவிட்டன. நிகழாண்டில் இதுவரை ஒரு வியாபாரியிடமிருந்து கூட பானை கொள்முதல் செய்வதற்கான தகவல் கிடைக்கவில்லை.
மண்ணும் கிடைக்கவில்லை. ஏற்கனவே தயார் செய்த பொருள்களும் விற்பனையாகவில்லை. இதனால் மட்பாண்டத் தொழிலாளர்கள் பலர் மாற்றுத் தொழில் தேடி செல்கின்றனர். மேலும் இடைத் தரகர்கள் காரணமாக இத்தொழில் முழுமையாக நலிவடைந்துவிட்டது. பானையின் அளவுக்கு ஏற்ப எங்களிடம் குறைந்த விலையில் பானைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அவற்றை பெருநகரங்களில் அதிக விலைக்கு விற்கிறார்கள்.
ஆனால் நாங்கள் கடன் வாங்கி பானை செய்து விட்டால் கடனை அடைக்கவே பணம் போதவில்லை. மேலும் இந்த மழைக் காலங்களில் வியாபாரம் இருக்காது. இதனால் இப்போது வாங்கும் கடனை அடைக்க மேலும் 6 முதல் 7 மாதங்கள் வேலை பார்ப்போம். அதற்குப் பிறகு மழை வந்துவிடும். மீண்டும் நாங்கள் கடன் வாங்குவோம். இப்படி தான் எங்கள் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பொங்கல் பண்டிகைக்கும் பானைகள் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்பது உறுதியாகிவிட்டது.
மட்பாண்டப் பொருள்களை தயார் செய்து, வீடுகளைச் சுற்றிலும் அடுக்கி வைத்துள்ளோம். விற்பனையாகாத பொருள்களால், வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. இத்தொழில் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் பாரம்பரிய திருவிழாக்கள், வழிபாடு போன்றவை தடையின்றி நடைபெற வேண்டும். அதேபோல், பொங்கல் பண்டிகைக்கு மண் பானையில் மட்டுமே பொங்கலிட வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். அதன் மூலம் மட்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி, கலை நயமிக்க இந்த தொழிலும் பாதுகாக்கப்படும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.