சென்னை: அதிமுகவில் கூட்டணி முடிவாகாத நிலையில், ஒருசில சலசலப்புகள் கிளம்பி உள்ளன.. அந்தவகையில், விரைவில் சில கட்சிகள் அதிமுக பக்கம் வரக்கூடும் என்கிறார்கள்.
பாஜக கூட்டணியை கழட்டிவிட்ட பிறகும்கூட, சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சிகளை பெரும்பாலும் அதிமுகவுக்குள் எடப்பாடி பழனிசாமியால் கொண்டு வர முடியவில்லை.. அதேபோல, திமுகவுக்கு எதிரான வலுவான கூட்டணியையும் இதுவரை உருவாக்க முடியவில்லை.
சொந்த கூட்டணியில் இதுவரை இடம்பெற்ற, ஏசி சண்முகம், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜிகே வாசன், ஜான் பாண்டியன் என ஒருத்தருமே அதிமுகவுக்கான ஆதரவை இதுவரை உறுதி செய்யவில்லை. அப்படியே இவர்கள் எல்லாம் கூட்டணிக்குள் வந்தாலும், திமுக போல பலம்வாய்ந்த கூட்டணியாக அது இருக்காது.
சீமான்: மெகா கூட்டணி என்ற இமேஜ் உருவாக வேண்டுமானால், பெரிய கட்சிகளை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டி உள்ளது. அதனால்தான், மநீம கமல்ஹாசனை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியை, அதிமுக எடுத்ததாக சொன்னார்கள். ஆனால், பச்சை சிக்னல் கமலிடமிருந்து வரவில்லை. பிறகு சீமானுக்கு குறி வைத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அவ்வளவு சீக்கிரம், அதிமுக கூட்டணிக்கு சீமான் ஓகோ சொல்வாரா? என்று தெரியவில்லை.
அதனால், திமுக கூட்டணிக்குள் கல்லெறிந்து பார்க்கும் முயற்சியையும் அதிமுக மேற்கொண்டது. அந்தவகையில், திருமாவளவன் அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா? என்ற ஆர்வம் எகிறியது. ஆனால், திமுகவுடன் தன்னுடைய கூட்டணியை பலமுறை உறுதி செய்துவிட்டார் திருமா.
10 சீட்டுக்கள்: எனவே, மிச்சம் இருப்பது காங்கிரஸ் என்பதால், அக்கட்சியிடம் தூது ஆரம்பமாகி உள்ளதாக தெரிகிறது. காங்கிரஸை பொறுத்தவரை, இந்த முறை 10 சீட்டுக்கு குறையாமல் போட்டியிடும் முடிவில் உள்ளது. ஆனால், திமுகவில் அவ்வளவு சீட்டுகள் தருவார்களா? என்று தெரியவில்லை..
20 சீட்டுக்களைகூட காங்கிரசுக்கு ஒதுக்க, அதிமுக மேலிடம் தயாராக இருக்கும்போது, இந்த விஷயம் ராகுல் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால், திமுகவுடன் எந்தவிதமான நெருடலும் இல்லாதபோது, எதுக்காக அதிமுக கூட்டணியை பற்றி பேசுகிறீர்கள்? என்று தமிழக காங்கிரஸ் சீனியர்களிடம் கடிந்து கொண்டாராம் ராகுல்.
நல்லுறவு: திமுகவுடன் நல்லுறவு என்பதில் ராகுல் உறுதியாக இருந்தாலும்கூட, சில நெருடல்கள் காங்கிரஸ், திமுக இடையே நிலவி கொண்டுதான் இருக்கிறதாம்.
குறிப்பாக, உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம எதிர்ப்பு பேச்சு, திமுக எம்பியின் " கோ மூத்திர பேச்சு" இதெல்லாம் டெல்லி காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.. அதுமட்டுமல்ல, 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்விக்கு காரணமே, உதயநிதி பேசிய சனாதன எதிர்ப்பு பேச்சுதான் என்கிறார்களாம் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள்.
காங்கிரஸ்: இப்படியொரு நெருடலைதான், அதிமுக பயன்படுத்தி கொள்ள பார்க்கிறதாம்.. இதற்காக காங்கிரசுடன் கை கோர்க்கவும் மறைமுக வேலைகளும் நடந்துவருகிறதாம்..
"புயல் பாதிப்புகளில் 4 மாநில மக்களின் அதிருப்திகள் திமுக மீது அதிகமாகிவிட்டது, இதை வைத்தே அரசியல் செய்தால் வெற்றி நமக்குதான்" என்று லிஸ்ட் போட்டு, காங்கிரஸிடம் எடுத்து சொல்லி வருகிறதாம் அதிமுக..
இந்தியா: இதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள்.. காங்கிரசுடன் உறவை வளர்த்து கொள்வதன் மூலம், இந்தியா கூட்டணியிலும் இடம் பிடித்து விட முடியும் என்று அதிமுக கணக்கு போடுகிறதாம். ஒருவேளை, காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட்டால், இதை வைத்தே சில கட்சிகள் தங்கள் பக்கம் வருவார்கள் என்றும், காங்கிரஸ் அதிமுக பக்கம் வந்துவிட்டால், சிறுபான்மையினர் ஓட்டுக்களும் தானாகவே அதிமுகவுக்கு வந்துவிடும் என்றும் பிளான் போடுகிறராம் எடப்பாடி பழனிசாமி.
இந்த விஷயமெல்லாம் டெல்லி மேலிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறதாம்.. எப்படியும் 19-ந்தேதி இந்தியா கூட்டணி கூட்டம் நடக்க போவதால், அதற்கு பிறகே, கூட்டணியில் ஒரு தெளிவு கிடைக்கலாம் என்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
Weather Data Source: Wettervorhersage 21 tage