டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான 2-வது வேட்பாளர் பட்டியலை ஆளும் ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட இருப்பதாகவும் புதுமுகங்கள் பலருக்கும் வாய்ப்பு அளிக்கப்படக் கூடும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 11 பே கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டிருந்தது.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. 10 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சிக்கு இந்த தேர்தல் மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. தலைநகர் டெல்லியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியான பாஜக முழு முனைப்பில் இருந்து வருகிறது.
டெல்லியில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் இப்போது இருந்த இடமே தெரியாமல் அழிந்து போய் கிடக்கிறது. இந்தியா கூட்டணியைப் பயன்படுத்தி ஆம் ஆத்மியுடன் கை கோர்க்க காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் உஷாராகிவிட்ட ஆம் ஆத்மி கட்சியோ, காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என அறிவித்துவிட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி கடும் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மேலும் ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் களத்தில் ஐ பேக் அமைப்பு களமிறங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஆம் ஆத்மிக்கு வியூகம் வகுத்து கொடுத்தது ஐ பேக் நிறுவனம்தான். இந்த தேர்தலுக்கும் ஐ பேக் நிறுவனத்தை நம்பி இருக்கிறது ஆம் ஆத்மி.
இதனிடையே டெல்லி சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே முதலாவது வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 11 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டு தேர்தல் பணிகள முழு வீச்சில் தொடங்கியது. இந்த நிலையில் 2-வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட உள்ளது ஆம் ஆத்மி.
ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிடும் 2-வது வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு புதுமுகங்கள் களமிறக்கப்படலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
Weather Data Source: Wettervorhersage 21 tage