ஹைதராபாத்: பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் பெரு வெற்றி பெற்ற நிலையில், தற்போது அவரை அதிரடியாக கைது செய்துள்ளது காவல்துறை. புஷ்பா-2 வெளியீட்டின் போது இளம் பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி பலியான வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது.
தெலுங்கு நடிகராக மட்டுமே அறியப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். புஷ்பா முதல் பாகத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரு வெற்றி பெற்றது.
இதனையடுத்து புஷ்பா 2 படம் உருவாகி ரிலீசாகியுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே நடித்த நட்சத்திரங்களுடன் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர். புஷ்பா முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்த நிலையில், புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலிலா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
முதல் பாகம் வெறும் 250 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் இரண்டாம் பாகம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. மேலும் முதல் பாகத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக பணியாற்றிய நிலையில், இரண்டாம் பாகத்திற்கு 4 இசையமைப்பாளர்கள் இணைந்துள்ளனர். அந்த வகையில், தேவி ஸ்ரீ பிரசாத், தமன், சாம் சி.எஸ். மற்றும் அஜனீஷ் லோகநாத் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.
தற்போது புஷ்பா 2 தி ரூல் படம் வரும் ஐந்தாம் தேதி வெளியாகி இருக்கும் நிலையில், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வசூல் வேட்டை செய்து வருகிறது. மாஸ் ஆக்சன் படமான புஷ்பா 2 படம் வெளியான சில நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டியது. அதிவேகமாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டிய திரைப்படம் என்ற பெருமையையும் புஷ்பா 2 பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த படம் மூலம் சர்ச்சையிலும் சிக்கினார் அல்லு. புஷ்பா 2 திரைப்படம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியான போது சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது ரசிகர்களை சந்திக்க அல்லு அர்ஜுன் சென்றார். அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிர் இழந்தார், இதை அடுத்து அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பேன் எனக்கூறிய அல்லு அர்ஜுன் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக உறுதியளித்திருந்தார்,
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிக்கடபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அல்லு அர்ஜுன், அவரது பாதுகாவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இனிமேல் வரும் காலங்களில் எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லன தெலுங்கானா அரசும் அறிவித்தது. இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனை அவரது வீட்டில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். முன் அனுமதி இன்றி கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து அவரை அவரது இல்லத்த்தில் வைத்தே கைது செய்த நிலையில் லிப்ட் மூலம் கீழ் தளத்துக்கு அழைத்து வந்து காரில் அழைத்துச் சென்றனர். தற்போது அவர் உஸ்மானியா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் விரைவில் அவர் ரிமாண்ட் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.