காங்கிரஸ் எல்லாம் ஓரம் போ.. மிசோரத்தில் யாரும் பெரும்பான்மை கிடையாது!

post-img

ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தில் கடந்த 7ம் தேதி தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த மாநிலத்தை பொறுத்த அளவில் மிசோ தேசிய முன்னணி (MNF), காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன.
பாஜக பெயரளவில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்திருக்கிறது. எனவே பாஜகவும் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது. அதேபோல கடந்த 1987ம் ஆண்டு மிசோரம் யூனியன் பிரதேசத்திலிருந்து, மாநிலமாக பரிணமித்ததிலிருந்து அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியிலிருக்கிறது.
ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி முதன் முறையாக 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கியுள்ளன. இது தவிர 27 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். மிசோ தேசிய முன்னணி தலைவரும் முதலமைச்சருமான ஜோரம்தங்கா, ஐஸ்வால் கிழக்கில் போட்டியிட்டுள்ளார்.
கடந்த 7ம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் இம்மாநிலத்தில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த வாக்காளர்களில் பெண்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம் கூட இல்லை என்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
அதாவது மிசோரமில் மொத்தம் 8.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 80.66% பேர் வாக்களித்துள்ளனர். வாக்களித்தவர்களில் 81.25% பேர் பெண்கள், 80.04% ஆண்கள். குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், ஒட்டுமொத்தமாக மாநில அளவில் வாக்குப்பதிவு சராசரி என்பது 80.66 ஆக இருக்கிறது. அப்படியெனில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவின் சராசரியை விட குறைவான அளவில் ஆண்களின் வாக்குப்பதிவு இருக்கிறது என்பதுதான்.
அதேபோல மாநிலம் முழுவதும் களமிறங்கிய 175 வேட்பாளர்களில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 15தான். இது மொத்த வேட்பாளர்களில் 10 சதவிகிதம் கூட கிடையாது. பெண்கள் அதிகம் வாக்களிக்கும் மாநிலத்தில், பெண் வாக்காளர்கள் 10 சதவிகிதம் கூட இல்லாதது பேசு பொருளாகியுள்ளது. மொத்தமுள்ள பெண் வேட்பாளர்களில் 3 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள், ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தலா இருவர் போட்டியிட்டுள்ளனர். மீதமுள்ளவர் சுயேட்சை வேட்பாளராவார்கள்.
இப்படி இருக்கையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ் (Republic TV-Matrize) கருத்துக்கணிப்பில், ஆளும் மிசோ தேசிய முன்னணி 17-22 தொகுதிகளிலும், ஜோரம் மக்கள் இயக்கம் 7-12 இடங்களிலும், காங்கிரஸ் 7-10 இடங்களிலும், பாஜக 1-2 தொகுதியிலும் வெல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க குறைந்தபட்சம் 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
அதேபோல 'டைம்ஸ் நவ்' (Times Now) கருத்து கணிப்பில், எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) 10-14 தொகுதிகளிலும், ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) 14-18 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் கட்சி 9-13 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், பாஜக 0-2 தொகுதிகளும் மற்றவை 0-1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
'ஏபிபி- சி வோட்டர்' (ABP-C Voter) கருத்து கணிப்பின்படி, ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) 12-18 தொகுதிகளிலும், ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) 15-21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 2-8 மற்றவை 0-5 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே தற்போது வரை வெளி வந்துள்ள கருத்துக்கணிப்பின் படி தோராயமாக, மிசோ தேசிய முன்னணி 14-19 இடங்களிலும், ஜோரம் மக்கள் இயக்கம் 11-17 தொகுதியிலும், காங்கிரஸ் 6-10, பாஜக 1-2 தொகுதிகளிலும் வெல்லும் என்று தெரிய வருகிறது. அதாவது இம்மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பதே இதன் அர்த்தம். எனவே இங்கு தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பிருக்கிறது.

 

Related Post