மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வயது முதிர்வால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை மகன்கள், பேரன்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் கொண்டாடி இறுதிச்சடங்கு செய்துள்ளனர். உயிரிழந்த 96 வயது மூதாட்டியின் இறுதி ஆசையை நிறைவேற்றும் வகையில் மகன்கள் மற்றும் 78 பேரன்கள், பேத்திகள் இணைந்து இறுச்சடங்கு நிகழ்வை ஆடல் பாடல், டிஸ்கோ வைத்து கொண்டாடியுள்ளனர்.
வயது முதிர்வால் இருக்கும் தாத்தா மற்றும் மூதாட்டிகளுக்கு கடைசி ஆசை ஒன்று இருக்கும். பெரும்பாலும் அந்த ஆசையானது இறப்பதற்கு முன்னாடி, தனது பேரன் திருமணத்தை பார்க்க வேண்டும் அல்லது பேத்தியின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்று தான். அப்படி பேரன், பேத்தி திருமணத்தை எல்லாம் பார்த்ததற்கு பின்னர் இனி நான் நிம்மதியாக போய் சேந்தால் கூட பரவாயில்லை என்று பேரன் பேத்திகளிடம் கூறுவார்கள்.
அப்படித்தான் மதுரை உசிலம்பட்டியில் வசித்து வந்த 96 வயது மூதாட்டி ஒருவர் தான் இறந்தால், நீங்கள் யாரும் கலங்க கூடாது, இறந்தவீடு மாதிரி இருக்கக்கூடாது, எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். என் இறுதி அஞ்சலி ஒரு திருவிழா போல் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். நேற்று முன் தினம் அவர் உயிரிழந்த நிலையில், அவரது மகன்கள் மற்றும் பேரன்கள், பேத்திகள் 78 பேரும் ஒன்று சேர்ந்து ஆடல் பாடல், டிஸ்கோ, கும்மிப்பாடல் என கொண்டாட்டத்துடன் அவரது இறுதிச்சடங்கை நடத்தியுள்ளனர்.
நடிகர் பரத், நாசர் நடிப்பில் வெளியாகி இருந்த எம்டன் மகன் திரைப்படத்தில் உயிரிழந்த தாத்தாவின் இறுதிச்சடங்கை எப்படி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுவார்களோ அதுபோலத் தான் மதுரை உசிலம்பட்டியில் இறுதி சடங்கு நடந்துள்ளது. இதுபற்றிய விவரத்தை இங்கு பார்க்கலாம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள சின்னப்பாலார்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர் பரமத்தேவர். இவரது மனைவி நாகம்மாள் (வயது 96). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும், 4 மகள்கள். இதேபோன்று இந்த தம்பதிக்கு மொத்தம் பேரன் மற்றும் பேத்திகள் என 78 பேர் இருக்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன் பரமத்தேவர் உயிரிழந்த நிலையில், மூதாட்டி நாகம்மாள் எப்போதும் மகன்கள், பேரன்கள், பேத்திகளுடன் அதீத பாசத்துடன் பழகுவாராம்.
எப்போதும் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என்று சொல்லி வருவாராம். எனக்கு வயசாகி விட்டதால், நான் எப்போது இறந்தாலும் சரி இறக்கும் போது யாரும் வருத்தப்பட கூடாது. இப்போது எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ அதுபோல நான் இறக்கும் போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அன்றைய தினம் துக்க வீடு போல இருக்க கூடாது. ஒரு திருவிழா போல் ஆட்டம் பாட்டத்துடன் என் இறுதிச்சடங்கு இருக்க வேண்டும்.
இது தான்யா என் கடைசி ஆசை. என்று மூதாட்டிகூறி வருவாராம். மகன்களையோ, மகள்களையோ, பேரன் பேத்திகளை பார்க்கும் போதோ இதைத்தான் நாகம்மாள் சொல்வாராம். இந்தநிலையில் உடல்நிலை காரணமாக நேற்று முன் தினம் நாகம்மாள் உயிரிழந்தார். மூதாட்டி ஏற்கனவே கூறியது போலவே, அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று அவரது இறுதிச்சடங்கானது ஒரு திருவிழா போல நடந்தது. மைக் செட் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் டிஸ்கோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ச்சி நடந்தது. ஆடல் பாடல் விஷில் சத்தத்துடன் டிஸ்கோ களை கட்டியது. உறவினர்கள் ஒரு பக்கம் வந்து அஞ்சலி செலுத்தி கொண்டிருக்க, மறுபக்கம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இதேபோல் நாகம்மாளின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து கும்மியடித்தனர். 96 வயது மூதாட்டியின் இறுதிச்சடங்கு அந்த பகுதி முழுவதும் பரவலாக பேசப்பட்டது. அந்த ஊரை சேர்ந்த கிராம மக்கள் கூறும்போது, ”மூதாட்டி நாகம்மாள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் கூறுவார். அவரும் அப்படித்தான் வாழ்ந்தார். இப்போது அவரது இறுதிச்சடங்கு இப்படி நடந்தததை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்” என்றனர்.