ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின் மாதந்தோறும் மின் கணக்கிடும் முறை அமல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் துணை மின் நிலையங்கள் சேதமடைந்தன. இதனால், மின் விநியோகம் தடைபட்டதால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். அதைத்தொடர்ந்து துணைமின் நிலையங்களில் சீரமைப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பட்டினப்பாக்கம் துணைமின் நிலையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பழுதடைந்த துணை மின் நிலையங்கள் சீரமைக்கப்பட்டு, இன்று மாலைக்குள் மின் விநியோகம் சீராகும் என்று தெரிவித்தார்.
மேலும் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என்றும், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின் மாதந்தோறும் மின் கணக்கிடும் முறை அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.