டெல்லி: வங்கதேசம் நம் நாட்டுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே தான் மேற்கு வங்கம், திரிபுரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கி பரந்த வங்கதேசத்தினர் பகிர்ந்து வரும் நிலையில், ‛‛உங்களின் நாட்டை உருவாக்க எங்களுக்கு 13 நாள் ஆனது. ஆனால் இப்போது வெறும் 13 நிமிடம் போதும். உங்கள் நாடு உங்களுக்கானதாக இருக்காது'' என்று ராகுல் காந்தியின் உறவினர் தெஹ்சீன் பூனவல்லா பதிலடி கொடுத்துள்ளார்.
வங்கதேசத்தில் வெடித்த வன்முறைய தொடர்ந்து பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு வந்துவிட்டார். தற்போது நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. ஷேக் ஹசீனா இருந்தவரை வங்கதேசத்துக்கும் நம் நாட்டுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது.
ஆனால் முகமது யூனுஷ் நம் நாட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல், கோவில்களை சேதப்படுத்துதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். அதேபோல் பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து நம் நாட்டுக்கு எதிராக அவர் செயல்பட தொடங்கி உள்ளார். இந்திய எல்லையில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறார்.
அதோடு இந்தியா வங்கதேச விவகாரங்களில் தலையிடுவதாக ஆதாரமின்றி தனது அரசில் அங்கம் வகிக்கும் தலைவர்களை வைத்து பேச வைத்து வருகிறார். வங்கதேசம் என்பதே பாகிஸ்தானில் இருந்து 1971ம் ஆண்டில் தான் தனி நாடாக உருவானது. இதற்கு நம் நாட்டு ராணுவம் தான் உதவி செய்தது. நம் நாட்டின் தாக்குதலை தாங்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் நம் ராணுவத்திடம் சரணடைந்தனர். அதன்பிறகே வங்கதேசம் என்ற நாடு உருவானது நம் நாட்டு வீரர்கள் உதவாவிட்டால் வங்கதேசம் இன்றும் உருவாகி இருக்காது. ஆனால் அந்த உதவியை மறந்து தற்போது முகமது யூனுஷ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்டம் போட்டு வருகிறது.
குறிப்பாக வங்கதேசம் தனிநாடாக உருவாக நம் நாட்டு வீரர்களின் பங்களிப்பை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16ம் தேதி நம் நாட்டில் விஜய் திவாஸ் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இன்று விஜய் திவாஸ். 1971 இல் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு பங்களித்த துணிச்சலான வீரர்களின் தைரியம் மற்றும் தியாகங்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதி, நமது தேசத்தைப் பாதுகாத்து நமக்குப் பெருமை சேர்த்தது. அவர்களின் தியாகங்கள் அடுத்த தலைமுறைகளுக்கு என்றென்றும் ஊக்கமளிக்கும் மற்றும் நமது தேசத்தின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்திருக்கும்'' என்று கூறியிருந்தார்.
இதற்கு வங்கதேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த நாட்டு இடைக்கால அரசின் சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ரூல், "நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறேன். 1971 டிசம்பர் 16 வங்கதேசத்தின் வெற்றி நாள். இந்த வெற்றியில் இந்தியா ஒரு கூட்டாளியாக இருந்தது. அதற்கு மேல் எதுவும் இல்லை" என்று கூறியிருந்தார். மேலும் பலரும் பிரதமர் மோடியின் பதிவை விமர்சனம் செய்தனர். அதோடு பாகிஸ்தானிடம் இருந்து பிரிய வங்கதேசத்துக்கு இந்தியா ஒன்றுமே செய்யவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயன்றனர்.
அதேபோல் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசுக்கு நெருக்கமான சமூக ஆர்வலரும், தற்போதைய இடைக்கால அரசில் முக்கியமானவர்களில் ஒருவராக உள்ள மஹ்பூஸ் ஆலம் என்பவர், தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய மேப்பை பகிர்ந்தார். அதில் நம் நாட்டுக்கு சொந்தமான வங்கசேதசம், திரிபுரா, அசாம் உள்ளிட்டவற்றை வங்கதேசத்தின் ஒருபகுதியாக குறிப்பிட்டு இருந்தார். அதோடு, ‛‛ எங்களுக்கும் தைரியம் இருக்கிறது. எங்களுக்கும் கனவு இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இதனால் பயந்துபோன அவர் அந்த பதிவை டெலிட் செய்தார்.
ஆனாலும் கூட மற்றவர்கள் அந்த மேப்பை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் வங்கதேசத்தை சேர்ந்த நாடில் இஸ்லாம் என்பவர் மேற்குவங்கம், திரிபுரா, அசாமை உள்ளடக்கி பரந்து விரிந்த வங்தேசம் என்று வலைதளங்களில் பதிவிட்டார். இந்த பதிவை பார்த்த காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் உறவினர் தெஹ்சீன் பூனவல்லா கடும் எச்சரிக்கையை கொடுத்துள்ளார். உங்களின் நாட்டை உருவாக்க 13 நாட்கள் எங்களுக்கு தேவைப்பட்டது. ஆனால் இப்போது 13 நிமிடம் போதும் உங்களின் நாடு உங்களுக்கானதாக இருக்காது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தெஹ்சீன் பூனவல்லா, ‛‛நாங்கள் ங்களை நண்பராக கருதுகிறோம். ஆனால் நீங்கள் எல்லை மீறினால் நினைத்து கூட பார்க்க முடியாத பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுக்கான தனிநாட்டை உருவாக்க எங்களுக்கு 13 நாள்(பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசத்தை உருவாக்க இந்தியா போரிட்ட நாள்) தேவைப்பட்டது . ஆனால் இப்போது வெறும் 13 நிமிடம் போதும். உங்களின் நாடு உங்களுக்கானது இல்லை என்பதை எங்களால் செய்ய மடியும். கவனமாக இரு ப்ரோ'' என்று அதிரடியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
வங்கதேசத்தை சேர்ந்தவருக்கு இப்படி அதிரடியாக பதிலடி கொடுத்த தெஹ்சீன் பூனவல்லா யார் என்றால் அடிப்படையில் தொழிலதிபர். சமூக ஆர்வலராகவும், அரசியல் அனலிஸ்ட்டாகவும் இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிறந்தவர். மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தியின் கணவர் ராபர் வதேரா உறவினர். அதாவது ராபர்ட் வதேராவின் உறவுக்கார பெண்ணை தான் தெஹ்சீன் பூனவல்லா திருமணம் செய்துள்ளார். அந்த வகையில் இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் தெஹ்சீன் பூனவல்லா ராகுல் காந்தியின் தூரத்து உறவினராகவும், பிரியங்கா காந்திக்கு நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.