விழுப்புரம்: விழுப்புரம் கொத்தனார் கொலையில் , குற்றவாளிகள் கூண்டோடு கைதாகி உள்ளார்கள்.. இதில், முக்கிய குற்றவாளியான ஒருவர் மட்டும் தப்பி உள்ளதால், அவரை போலீசார் தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது விழுப்புரத்தில்?
கடந்த 14ம் தேதி, விழுப்புரத்தில் இந்திரா நகர் சாலையோரம் மணிகண்டன் என்பவர் இறந்து கிடந்தார். இவர் வீ.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர்.. கொத்தனாராக வேலை பார்ப்பவர்..
மதுபோதையில் அவர் கிடந்ததால், அளவுக்கு அதிகமான மதுவை குடித்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து விழுப்புரம் தாலுகா போலீசார், மணிகண்டன் சடலத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில், சயனைடு கலந்த மது குடித்ததால்தான் மணிகண்டன் உயிரிழந்தது தெரியவந்தது.. இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், மணிகண்டனின் மனைவி தமிழரசியிடம் விசாரனையை துவங்கினார்கள். அப்போதுதான் தமிழரசியின் கள்ளக்காதல் அம்பலமானது.
ஆரம்பத்தில் மணிகண்டனும், தமிழரசியும் சென்னையில்தான் வசித்து வந்துள்ளனர்.. அப்போது சென்னையிலேயே, தமிழரசிக்கும் சங்கர் என்பவருக்கும் பலவருடங்களாகவே தவறான உறவு இருந்து வந்துள்ளது.. இந்த விஷயம் மணிகண்டனுக்கு தெரிந்து அதிர்ச்சியடைந்து, மனைவியை கண்டித்துள்ளார்.. அத்துடன், சென்னையை காலி செய்துவிட்டு, சொந்த கிராமமான வீ.சாத்தமூருக்கு அழைத்து வந்துள்ளார்.
ஆனாலும், கொத்தனார் வேலைக்கு மணிகண்டன் சென்றாலும், தமிழரசி சங்கருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழரசியை மறுபடியும் மணிகண்டன் கண்டித்துள்ளார். அதற்குபிறகுதான் மணிகணடனை கொலை செய்ய தமிழரசி திட்டமிட்டுள்ளார்.. இதற்காக சங்கர், அவரது நண்பர்கள் கார்த்திக்ராஜா, சீனுவாசன் ஆகியோர் இணைந்து, மணிகண்டனை கொலை செய்வது குறித்து திட்டம் தீட்டியுள்ளனர்.
அதன்படி, சம்பவத்தன்று கார்த்திக் ராஜாவின் 21 வயது மனைவி சுவேதா என்பவர், மணிகண்டனுக்கு போன் செய்து, கட்டிட வேலை செய்ய வேண்டியிருக்கிறது, இந்த வேலை சம்பந்தமாக பேசி, முன்பணம் வாங்க விழுப்புரம், இந்திரா நகர் பைபாஸ் ரோடு அருகே வரும்படி கூறியுள்ளார்.
இதை உண்மை என நம்பிய மணிகண்டனும் இந்திரா நகருக்கு சென்றுள்ளார்.. அங்கே கார்த்திக்ராஜா, சீனுவாசன் ஆகியோர் மணிகண்டனுடன் கட்டிடம் வேலை சம்பந்தமாக பேசிவிட்டு, பிறகு சேர்ந்து மது குடிக்க அழைத்துள்ளனர். பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று, சயனைடு கலந்த மதுவை மணிகண்டனை குடிக்க செய்துள்ளனர்.
மது குடித்துவிட்டு மணிகண்டன் சர்வீஸ் சாலையோரம் வந்துகொண்டிருந்தபோதுதான் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.. மணிகண்டனுக்கு உயிர் பிரிந்துவிட்டது என்று உறுதியானபிறகு, இந்த விஷயத்தை தமிழரசிக்கும், சங்கருக்கும் கார்த்திக்ராஜா, சீனுவாசன் தெரியப்படுத்தி உள்ளார்கள்.
இவ்வளவு தகவல்களும் தமிழரசியிடம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.. இதனையடுத்து குற்றவாளிகளான இறந்த கொத்தனாரின் மனைவி தமிழரசி, சங்கர், சீனுவாசன், சுவேதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்... ஆனால், கார்த்திக் ராஜா என்பவர் இன்னும் சிக்கவில்லை.. அவரை போலீசார் தேடி வருகின்றனர்
மணிகண்டன், தமிழரசி தம்பதிக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்களாம். சென்னையில் 6 வருடங்களாக சங்கருடன் தமிழரசிக்கு உறவு நீடித்துள்ளது.. மணிகண்டன் கண்டித்தும் கள்ளக்காதல் தொடர்ந்ததால், சில மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊரான வி.சித்தாமூருக்கு குடும்பத்துடன வந்தார். ஆனால் தினமும் சங்கருடன் செல்போனில் பேசி வந்துள்ளார் தமிழரசி. இது தெரிந்தும் ஆத்திரமடைந்த மணிகண்டன், தமிழரசியை சில தினங்களுக்கு முன்பு தாக்கியுள்ளார். இதற்கு பிறகுதான் கொலை திட்டம் தீட்டப்பட்டதாம்.
கைதாகியிருக்கும் சீனிவாசன் இதற்கு முன்பு, நகை பட்டறையில் வேலை செய்தவராம். அதனால் நகை செய்ய பயன்படும் சயனைடு கொடுத்து மணிகண்டனை கொலை செய்தால் யாருக்கும் சந்தேகம் வராது என்றும், மணிகண்டனுக்கு மது பழக்கம் உள்ளதால், அதில் கலந்து கொடுக்கலாம் என்றும் திட்டமிட்டுள்ளார்கள்.. அதன்படியே சீனிவாசனும், தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் சயனைடு வாங்கி வந்தாராம். இந்த கொலை சம்பவம் விழுப்புரத்தை உலுக்கி எடுத்து வருகிறது.