புதுவை: காரைக்கால் அரசலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பை பார்வையிட சென்ற அமைச்சர் வெள்ள நீரில் சிக்கிய நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த காட்சி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த கால கட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தம், புயல் என உருவாகி தமிழகத்திற்கு இயல்பை காட்டிலும் அதிக மழைப்பொழிவை கொடுத்தது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் வடமாவட்டங்களை புரட்டி போட்டுவிட்டது என சொல்லும் அளவுக்கு சேதாரங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்த மழையால் நீர் நிலைகள் திறந்துவிடப்பட்டு ஆங்காங்கே ஊருக்குள் தண்ணீர் சென்றுவிட்டது. அது போல் கடந்த வியாழக்கிழமை அன்று வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் வடதமிழக மாவட்டங்களிலும் தென் தமிழகத்திலும் கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் கொள்ளளவுக்கு மேல் நிரம்பியுள்ளது.
பெஞ்சல் புயலால் தமிழகம் மட்டுமல்லாது புதுவை, காரைக்காலும் பாதிக்கப்பட்டது. தமிழக பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பிவிட்டதால் உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் அரசலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊழியப்பத்து- அத்திப்படுகை கிராமங்களை இணைக்கும் நடைபாலத்தில் இடதுபுற இணைப்புச் சாலையில் கரையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து புதுவை அமைச்சர் திருமுருகனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் அதிகாரிகளுடன் சென்று பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளையும் பாலத்தையும் பார்வையிட்டார். அப்போது அமைச்சர் திருமுருகன் ஊழியப்பத்து கிராமம் வழியாக பாலத்தின் மீது நடந்து சென்றார்.
இரவு நேரம் என்பதாலும் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாலும் இருட்டில் நடந்து சென்ற போது இடதுபுற இணைப்புச் சாலை திடீரென உள்வாங்கி சரிந்து விழுந்தது. அதில் திருமுருகன் நிலைத்தடுமாறினார். உடனடியாக சுதாரித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.
அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட அடுத்த நொடியே 5 மீட்டர் நீளத்திற்கான தார் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொதுப் பணித் துறை மூலம் மண் மூட்டைகள் வைத்து சீரமைக்கப்பட்டது.
ஆற்றில் வெள்ள நீர் குறைந்ததுடன் உடைந்த பாலம் சரி செய்யப்படும் என தெரிகிறது. அமைச்சர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.