குமரி: குமரி மாவட்டம் இடைக்காடு அருகே உள்ள முத்தாரம்மன் கோவிலில் நள்ளிரவில் புகுந்த 2 கொள்ளையர்கள் கோவில் சிலைகள், குத்து விளக்குகள் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். திருடுவதற்கு முன்பாக இரண்டு கொள்ளையர்களும் பயபக்தியோடு சாமி கும்பிடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
குமரி மாவட்டம் அருமனை தாலுகா இடைக்காடு அருகே புத்தன் சந்தை சந்திப்பு பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி ஒருவர் பணி புரிந்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன் தினமும் அவர் பூஜை எல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் அதாவது நேற்று காலை மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
பூசாரி கோவிலுக்கு வந்து பார்த்த போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. மேலும் உள்ளே இருந்த சிறிய சிறிய சாமி சிலைகள் மற்றும் வெண்கல குத்து விளக்குகள் காணாமல் போயிருந்தது. இதேபோன்று கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் பதறிப்போன பூசாரி உடனடியாக ஊர் நாட்டாமை மற்றும் மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த ஊர் மக்கள் கோவிலுக்கு வந்து பார்த்தனர். பூசாரியிடம் கேட்டபோது, நான் தான் நேற்று இரவு கோவிலை பூட்டி சென்றேன். இதனால் நேற்று இரவு தான் யாரோ மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கோவில் நிர்வாகத்தினர் பார்வையிட்டனர்.
அப்போது 2 பேர் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து கைவரிசை காட்டியது வீடியோவில் பதிவாகியிருந்தது. அப்போது அந்த கொள்ளையர்கள் செய்த காரியும் அங்கிருந்தவர்களை ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது அந்த கொள்ளையர்கள் இருவரும் முதலில் திருட வந்தவர்கள் போலவே இல்லை. அவர்கள் இரண்டு பேரும் முத்தாரம்மன் கோவிலில் அம்மனை பயபக்தியோடு வணங்குகின்றனர்.
இதன் பின்னர் தான் அவர்கள் கைவரிசை செய்கின்றனர். குத்துவிளக்கை திருடும் போதும் பயபக்தியோடு கையால் தொட்டு வணங்கிவிட்டு பிறகு தாங்கள் கொண்டு வந்த சாக்குப்பையில் அள்ளி வைக்கின்றனர். பின்னர் அனைத்தையும் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது போல் வீடியோ பதிவாகியிருந்தது. இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் அருமனை போலீசாரிடம் புகாரளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே அதே சமயத்தில் கேரளா - குமரி எல்லைப்பகுதியான பரக்குன்று அருகே 2 பேர் பைக்கில் சாக்குப்பையை வைத்துக்கொண்டு சந்தேகத்திற்கிடமாக சுற்றி கொண்டு இருந்துள்ளனர். இதனை அந்த பகுதியில் இருந்த புத்தன் சந்தை பகுதியை சேர்ந்த ஒருவர் கவனித்துள்ளார்.
உடனே அவர் அந்த சாக்குப்பையில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று கேட்க, அவர்கள் முன்னுக்கு பின்னாக பேசியிருக்கிறார்கள். இதையடுத்து சந்தேகமடைந்து அங்குள்ளவர்கள் சாக்குப்பையை திறந்து பார்த்தனர். இதில் கோவில் சிலைகள், குத்துவிளக்குகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அங்குள்ள பளுகள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து கொள்ளையர்கள் 2 பேரிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் தான் புத்தன் சந்தை முத்தாரம்மன் கோவிலில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து அருமனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கொள்ளையடித்த பொருட்களையும் போலீசார் மீட்டனர். இந்த கொள்ளையர்கள் இருவரும் வந்த மோட்டார் சைக்கிளும் யாரோ ஒருவரிடம் இருந்து ஆட்டையை போட்டது தானாம். எனவே வேறு எங்காவது இவர்கள் கொள்ளையடித்து உள்ளனரா என்றும் விசாரித்து வருகிறார்கள்.
Weather Data Source: Wettervorhersage 21 tage