சென்னை: அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் பேசியிருக்கும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்நிலையில், அமித்ஷாவின் கருத்து கண்டனத்திற்குரியது என இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
விடுதலை திரைப்படத்தின் 2ம் பாகம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களுடன் இயக்குநர் வெற்றிமாறன் சென்னையில் காசி திரையரங்கிற்கு இன்று காலை வந்திருந்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். குறிப்பாக நாடாளுமன்றத்தில், அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். பதிலளித்த வெற்றிமாறன், "அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது" என்று கூறியிருந்தார்.
அமித்ஷா பேசியது என்ன?: நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. இன்றுடன் இந்த கூட்டத்தொடர் முடிவடைகிறது. முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை, அரசியலமைப்பு தின விவாதத்தில் பங்கேற்று பேசியிருந்த அமித்ஷா,
"அம்பேத்கர், அம்பேத்கர் என்று முழக்கமிடுவது இப்போது ஃபேஷனாகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்" என்று பேசியிருந்தார்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்: அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியது அம்பேத்கர்தான். ஆனால், அவரின் பெயரை சொல்வதற்கு பதில், கடவுளின் பெயரை உச்சரிக்க அமித்ஷா கூறியுள்ளார். இது அம்பேத்கரை அவமதிக்கும் செயல் என்று இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த செயலுக்காக அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தனது கருத்துக்காக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
போராட்டம்: நேற்றைய தினம் அமித்ஷாவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்பிக்கள் நாடாளுமன்ற அவை நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தை முடித்துக்கொண்டு வந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையினுள் நுழைய முயன்றனர். ஆனால், வாசலில் இருந்த பாஜக எம்பிக்களுக்கும், அவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
ராகுல் மீது புகார்: இந்த கைகலப்பில் ராகுல் காந்தி தாக்கியதாக பாஜக எம்பிக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதேநேரம், பாஜக எம்பிக்கள்தான் தங்களை தாக்கியதாக காங்கிரஸ் எம்பிக்களும் புகார் அளித்துள்ளனர். புகார்கள் காரணமாக ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் எம்பிக்கள் மீதும், பாஜக எம்பிக்கள் சிலரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அமித்ஷாவின் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் அவருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
தமிழகத்தில் போராட்டம்: தமிழ்நாட்டில் நேற்று மாநிலம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவினர் நூற்றுக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் விசிகவினர் 100 பேர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். பல்வேறு மாவட்டங்களில் அமித்ஷாவின் உருவ பொம்மையை எரித்து எதிர்க்கட்சியினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் அமித்ஷா பேசியது கண்டனத்திற்குரியது என்று கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.