சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட்ட ஆனந்த் டெல்டும்டே ஒரு அர்பன் நக்சல் என கூறிய நிலையில் அதற்கு பதிலளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், "ஆனந்த் டெல்டும்டேவிற்கு தீவிரவாதி என முத்திரை குத்தி அந்நியப்படுத்த முயற்சிப்பது அநாகரிகமான அரசியல்" எனத் தெரிவித்துள்ளார்.
"எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட, சமூக செயற்பாட்டாளரும், அம்பேத்கரின் பேரனுமான ஆனந்த் டெல்டும்டே பெற்றுக்கொண்டார். இந்நிலையில், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடவும், தொகுப்பதற்கும் இந்தியாவில் ஆளே இல்லையா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
கோவையில் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் முக்கிய விருந்தினராக கலந்துகொண்ட ஆனந்த் டெல்டும்டே ஒரு அர்பன் நக்சல். தமிழகத்திற்கு நக்சல்களை கொண்டு வந்துவிடலாம் என நினைக்கிறார்களா என தெரியவில்லை. அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடவும், தொகுப்பதற்கும் இந்தியாவில் வேறு ஆளே இல்லையா?
ஆனந்த் டெல்டும்டேவின் தம்பி மிலிந்த் டெல்டும்டே, மராட்டிய வனப்பகுதியில் நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 22 நக்சல்களில் ஒருவர். பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆனந்த் டெல்டும்டே. இங்கு புத்தக வெளியீட்டு விழாவின் மூலம் நக்சல்வாதத்தை ஊக்கப்படுத்த புத்தக பதிப்பகத்தார் முயற்சிக்கிறார்களா?" என கேள்வி எழுப்பினார்.
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆனந்த் டெல்டும்டே மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதால் தான் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய உடன்பிறப்பு ஒருவர் தலைமறைவாகி இருக்கிறார் என்கிற சந்தேகத்தின் பெயரில் அவரைப் பிடித்துச் சென்றது என்.ஐ.ஏ. அவ்வளவுதான்.
அவர் வெளிப்படையாக பல துறைகளில் உயர்நிலைப் பொறுப்புகளில் இருந்து பணியாற்றியவர். ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய ஒரு பேராசிரியர். ஆனால், இடதுசாரி சிந்தனையாளர். புரட்சியாளர் அம்பேத்கருடைய பேத்தியின் கணவர். பிரகாஷ் அம்பேத்கருடைய தங்கையின் கணவர். அவர் நீதிமன்ற அனுமதியோடுதான் தமிழ்நாட்டுக்கு வந்தார். சட்டபூர்வமாகத்தான் அனுமதி பெற்றிருக்கிறார்.
அவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு எல்லோரும் அழைக்கிறார்கள். அவரை மேலும் தீவிரவாத முத்திரை குத்தி அந்நியப்படுத்த முயற்சிப்பது அநாகரிகமான அரசியல். பாஜக இதுபோன்ற அரசியலை தமிழ்நாட்டுக்கு வடக்கே வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர , தமிழ்நாட்டில் வைத்துக்கொள்ளக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage