அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, கைது குறித்து செந்தில் பாலாஜி குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்ததாக அமலாக்கத்துறை பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்ட உடனேயே, அதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்படவில்லை என்பதால், செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதமானது என்று வாதிட்டார்.
இதனை கருத்தில் கொள்ளாமலேயே நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருப்பதாகவும் முறையிட்டார்.
அமலாக்கத்துறையை காவல்துறையினராக கருத முடியாது என்பதால், அமைச்சரை காவலில் எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் என்.ஆர். இளங்கோ வாதிட்டார். அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளதால்,
செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை என்பது நிரூபணம் ஆவதாகக் கூறினார். சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டப்படி, ஆதாரங்கள் இருந்தால் கைது செய்யலாம் என்றும் குறிப்பிட்டார்.
கைது செய்யும் போது அதற்கான காரணங்களை கூற வேண்டியதில்லை என்றும், கைதுக்கு பின்னர் காரணத்தை கூறலாம் என்றும் வாதிட்டார். செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் தான் இருப்பதாகவும், அமலாக்கத் துறை காவலில் இல்லை என்றும் கூறிய துஷார் மேத்தா,
எனவே அவரை ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது என்றும் வாதிட்டார். நீதிமன்ற காவலில் வைக்க ஆஜர்படுத்தும் போது, அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர அமலாக்கத் துறைக்கு உரிமை உள்ளதாகவும், ஒருவர் நீதிமன்ற காவலில் இருக்கும் போது ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.