சென்னை: யார் கால்களிலும் விழவேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. பாஜகவுடன் என்றைக்குமே கூட்டணி கிடையாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு பதில் கொடுத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. அது ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம். அதிமுக பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும். பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது தோல்வியை சந்தித்த அதிமுக, கூட்டணியில் இருந்து வெளியே வந்து படுதோல்வி அடைந்து விட்டது.
பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்கு அதிமுக வரவேண்டும். இல்லையென்றால் அழிந்துவிடும் எனக் கூறி இருந்தார். இது குறித்துப் பதில் அளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "கூட்டணிக்கு நேரமும் காலமும் இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஒழிக்கப்பட வேண்டும். சூழலை பொறுத்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்" எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, செய்தியாளர்கள் டிடிவி தினகரன், அண்ணாமலை ஆகியோரின் கருத்துகள் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், "2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை, பாஜகவுடன் இன்றைக்கும், என்றைக்குமே கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எங்கள் நிலைப்பாடு தொடரும்.
டிடிவி தினகரனை பொறுத்தவரை தன்மானத்தை விட்டு விட்டு, தன் மீதான வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாஜகவிவிடம் சரண்டராகிவிட்டார். பாஜகவிடம் சரணடைந்த ஒருவர் பாஜகவிடம் கூட்டணிக்கு வாங்க என்று சொல்வது ஏற்புடையது அல்ல. அதிமுகவை பொருத்தவரை தன்மானத்தோடு இயங்கக்கூடிய ஒரு இயக்கம். யார் காலிலும் விழவேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. டிடிவி தினகரன் போல பாஜகவின் காலில் அதிமுக விழ வேண்டிய அவசியம் இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு கூட வெற்றிபெறும்." என்றார்.
மேலும் பேசிய ஜெயக்குமார், "திமுகவை பொறுத்தவரை இரட்டை நாக்கு. நேற்றொரு கொள்கை இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்கை. பதவி சுகத்திற்காக யாரை வேண்டுமானாலும் விடுவார்கள். யார் காலை வேண்டுமானாலும் வாருவார்கள். அதிமுகவை பொறுத்தவரை அந்த நிலை என்றைக்குமே இருந்தது கிடையாது.
ஸ்டாலின் அவர்களின் அப்பா முதலமைச்சராக இருந்த போது சர்க்காரியா கமிஷனை கண்டு பயந்தது யார்? அன்றைக்கு பயந்து காவிரி உரிமை பிரச்சனையில் காவிரி உரிமையை விட்டுக் கொடுத்தார். ச்சைக் கொடி காட்டி கச்சை தீவை தாரை வார்த்தவர்கள். முல்லைப் பெரியாறு பிரச்சனை மத்திய அரசுக்கு பயந்து உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கி விட்டு வந்தார்.
தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்து விட்டு மகனுக்கு முடிசூட்டி விட்டோம் என்ற ஆனந்தத்தில் தான் ஸ்டாலின் இருக்கிறார். தமிழ்நாடு எக்கேடு கெட்டுப் போனாலும் அவருக்கு கவலை இல்லை. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் திமுக அரசிற்கு மிகப்பெரிய குட்டு வைத்துள்ளது. சிபிஐக்கு பயந்து மேல்முறையீடு சென்றார்கள். ஆக உச்சநீதிமன்றமே குட்டு வைத்து அனுப்பியுள்ளது" எனத் தெரிவித்தார்.