சத்தீஸ்கரில் களமாடிய நோட்டா.. 1.27% வாக்குகள் அள்ளியது.. தமிழ்நாட்டை விட அதிகம்தான்

post-img

சென்னை: சத்தீஸ்கரில் நோட்டாவுக்கு 1.28% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மி கட்சிக்கு 0.93 % வாக்குகளும், சிபிஐ கட்சிக்கு 0.40 % மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 0.04வாக்குகளும் கிடைத்துள்ளன. சில அரசியல் கட்சிகளை விட நோட்டாவிற்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.
தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை. அதேசமயம், வாக்களிப்பதிலிருந்து தவறவும்; தனது வாக்கை இன்னொருவர் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்கவும் விருப்பமில்லை - இப்படியான ஒரு தருணத்தில் வாக்காளர்கள் என்ன செய்ய முடியும்? அவர்களுக்கென உருவாக்கப்பட்ட முறைதான் நோட்டா.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் (1961)-ன்படி 49-ஓ எனும் முறை கொண்டுவரப்பட்டது. எனினும், தொடக்கத்தில் வாக்குச் சீட்டுகளிலோ, வாக்குப் பதிவு இயந்திரத்திலோ இதற்கான பொத்தான்கள் சேர்க்கப்படவில்லை. எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர், வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் அதைத் தெரிவிக்க வேண்டும்; அதற்கான படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்றெல்லாம் நடைமுறைகள் இருந்தன. இது, வாக்களிப்பதற்கான ரகசியக் கொள்கையை மீறுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் 2013-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வாக்குச் சீட்டுகளிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் 'நோட்டா' ( NOTA) (நன் ஆஃப் தி அபோவ்) வசதியை ஏற்படுத்த உத்தரவிட்டது. வேட்பாளர் பட்டியலின் இறுதியில் 'நோட்டா' சேர்க்கப்பட்டது. இதன்மூலம், வாக்காளர் நோட்டாவுக்கு வாக்களித்த ரகசியம் காக்கப்படும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. 2013-ல் டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு குழுவில் கடைசி விருப்பமாக, 'மேற்கண்ட எதுவும் இல்லை' அல்லது நோட்டா பொத்தானை EVMல் சேர்த்தது. நோட்டாவிற்கு அதன் சொந்த சின்னம் உள்ளது.
மாநிலத்தில் 2018 சட்டமன்றத் தேர்தலில் நோட்டா 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானது. நோட்டாவை திரும்ப பெற வேண்டும் என்று சத்தீஸ்கர் முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். NOTA தேர்தலை எவ்வாறு பாதிக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த பூபேஷ் பாகேல் "தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும். வெற்றி மற்றும் தோல்வியின் வித்தியாசத்தை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றுள்ளது என்பது பல முறை பார்க்கப்பட்டது என்று கூறினார். பல வாக்காளர்கள் மேலே உள்ளதையோ அல்லது கீழே உள்ளதையோ அடிக்க வேண்டும் என்று நினைத்து நோட்டா பட்டனை அழுத்துகிறார்கள் என்றார். எனவே நோட்டாவை நிறுத்த வேண்டும் என்றார்.
2018 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 1,85,88,520 வாக்காளர்களில் 1,42,90,497 பேர் 76.88 சதவீத வாக்குகளைப் பதிவு செய்தனர். நோட்டா 2,82,738 வாக்குகள் பெற்றது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், 11 லோக்சபா தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில் 1.96 லட்சத்துக்கும் அதிகமான நோட்டா வாக்குகள் பதிவானது. 2019ஆம் ஆண்டில் பஸ்தார், சர்குஜா, கான்கேர், மஹாசமுந்த் மற்றும் ராஜ்நந்த்கான் ஆகிய ஐந்து லோக்சபா தொகுதிகளில் நோட்டா மூன்றாவது இடத்தில் இருந்தது.
2023ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நோட்டாவிற்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் 1.27 சதவிகித வாக்குகள் பதிவானது. ஆம் ஆத்மி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சியினரை விட நோட்டாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் அமமுக மற்றும் மநீம உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகளை விட நோட்டாவில் அதிகம் வாக்குகள் விழுந்துள்ளன. சுமார் 3,45,538 வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்துள்ளது.2,812 தபால் வாக்குகள் நோட்டாவிற்கு வந்துள்ளது. 12 தொகுதியில் 4ம் இடமும், 77 தொகுதிகளில் 5-ம் இடத்தையும் நோட்டா பெற்றுள்ளது. நோட்டாவிற்கு மொத்தம் 0.75% வாக்குகள் பதிவாகியிருந்தன.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் அதிக நோட்டாக்கள் பதிவாகியுள்ளது. விராலிமலையில் குறைந்த அளவில் நோட்டாக்கள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2016 சட்டமன்றத் தேர்தலில், நோட்டா 1.1% வாக்குகளைப் பெற்றது, 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 0.75% நோட்டா வாக்குகள் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Post