வாய்ப்பில்லை ராஜா.. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இல்லை! ஜனவரியில் கேம் ஓவர்! பழைய ப்ளான் தான்!

post-img
சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில், அந்த தேர்தல் தற்போது தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஜனவரியில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டு, தனி அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். இதனால் தேர்தல் நடக்காது என்றே கூறப்படுகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து, உள்ளாட்சி அமைப்புகளின் கீழும் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது. மாநகராட்சி மேயர், துணை மேயர், வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இவை தவிர்த்து ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வார்டு வரையறை பிரச்சினை, எல்லை தீர்மானம் உள்ளிட்ட காரணமாக ஒன்பது மாவட்டங்களில் தாமதமாக அதாவது 21 மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்பட்டது. 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிலையில், மற்ற ஒன்பது மாவட்டங்களுக்கு 2021ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டவர்களின் பதவிக்காலம் வரும் ஜனவரி 5ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் தேர்தல் நடைபெறுவதே தள்ளிப் போகலாம் அல்லது நடத்தப்படாமலேயே போகலாம் என அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது. அதாவது தற்போது சில மாவட்டங்களில் கிராமங்களை நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கிராம மக்கள் இதனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் காரணமாகவும், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை தொடங்க இன்னும் ஒரு ஆண்டு காலமே இருக்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலால் தேவையில்லாமல் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் இடையே மனக்கசப்பு ஏற்படும். இதனால் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டுமொத்தமாக 2026க்கு பிறகு நடத்தலாம் என திமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. தற்போதைய சூழலில் ஊரக உள்ளாட்சி அமைப்பில் உள்ள ஏறக்குறைய 92 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக அங்கு தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் 2019ஆம் ஆண்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இடைவெளி விட்டு நடத்தப்பட்டது. இதனால் இரு பகுதிகளாக தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரே மாதிரியான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் தற்போதைக்கு தேர்தலுக்கான வாய்ப்புகள் இல்லை. எனவே கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் செயல்பட்டது போல ஊரக உள்ளாட்சி அமைப்புகளை கலைத்துவிட்டு தனி அதிகாரிகளில் நியமனம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யா இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐந்தாம் தேதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் ஆறாம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அதற்கு பின்வரும் நாட்களில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மாவட்ட ஊராட்சிகளை திட்ட அலுவலர் அல்லது கூடுதல் ஆட்சியர்களும், ஊராட்சி ஒன்றியங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்களும், ஊராட்சிகளை ஊராட்சி செயலர்களும் மேலாண்மை செய்யும் வகையில் இந்த அறிவிப்பு இருக்கும் என்கின்றனர்.

Related Post