நெல்லை: ஜமைக்கா நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி கொள்ளை சம்பவத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் 3 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கரீபியக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு ஜமைக்கா. ஜமைக்கா நாட்டில் உள்ள பிராவிடன்ஸ் தீவில் தமிழகத்தின் தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் ஜே கே புட் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட்டில் தமிழகத்தின் தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் வேலை பார்த்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் கடந்த 17 ஆம் தேதி அன்று நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் விக்னேஷ் உள்பட பலரும் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது திடீரென ஒரு கொள்ளை கும்பலினர் துப்பாக்கியோடு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் கொள்ளையடிப்பதற்காக அங்குள்ளவர்களை மிரட்டியுள்ளனர்.
அப்போது அங்கு இருந்தவர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கியில் சுட்டனர். இதில் நெல்லை மாவட்ட இளைஞர் விக்னேஷ் மீது குண்டு பாய்ந்தது. மேலும் 3 பேர் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் நெல்லை இளைஞர் விக்னேஷ் உயிரிழந்தார். மற்ற 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பற்றிய விவரம் தெரியவரவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சிசிடிவி வீடியோவில், துப்பாக்கியோடு கடைக்குள் புகுந்த சிலர் கடை ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுடுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியடைய செய்தது.
இந்த நிலையில் தற்போது ஜமைக்காவில் உயிரிழந்த விக்னேஷ் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கும் விக்னேஷ் உறவினர்கள் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.