டெல்லி: புதிய விமான போக்குவரத்து மசோதா 2024 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி சோமு, சொந்தமாக விமானமே இல்லாத நாட்டிற்கு எதற்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவுக்கு என ஏர் இந்தியா விமானம் சொந்தமாக இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த விமான போக்குவரத்து துறையை முற்றிலுமாக தனியார்மயப்படுத்திவிட்டது. எனவே, ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கிவிட்டது. கடந்த காலங்களில் உக்ரைன் போர் வெடித்தபோது அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டு வர ஏர் இந்தியாவைதான், மத்திய அரசு பயன்படுத்தியது. ஆனால் இப்போது இதுபோன்ற ஒரு அவசர நிலை ஏற்பட்டால் தனியார் விமானங்களை நாட வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.
இது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை எழுப்பி வருகின்றன. இப்படி இருக்கையில்தான் புதிய விமான போக்குவரத்து மசோதா 2024 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை விமர்சித்து பேசிய கனிமொழி சோமு, மத்திய அரசுக்கு காட்டமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதாவது, “இந்திய அரசுக்கு என சொந்தமாக விமானங்கள் கிடையாது. நாம் விமானங்களையும் உருவாக்குவதில்லை. ஆனால் விமான தயாரிப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும் என்று புதிய விமான போக்குவரத்து மசோதா 2024-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது முரணானதாக இருக்கிறது. மத்திய அரசு முன்வைத்த மேக் இன் இந்தியா, ஸ்டேண்ட்-அப் இந்தியா என்கிற திட்டங்களை கொஞ்சம் திரும்பி பாருங்கள். இரண்டுமே நகைப்புக்குரியதாக மாறியிருக்கிறது. இவை தற்போது வெற்று முழக்கங்களாக மட்டுமே இருக்கிறது.
விமான விபத்து குறித்து ஆய்வு, போதுமான பாதுகாப்பு குறித்து புதிய சட்டங்கள் இயற்ற மத்திய அரசுக்கு உரிமை வழங்கும் விதமாக இந்த மசோதா இருக்கிறது. ஆனால் உண்மை என்னவெனில், ஏற்கெனவே இதுபோன்ற மசோதாக்கள் இயற்றப்பட்டிருக்கிறருக்கின்றன. எனவே அரை மாவையே அரைக்க வேண்டாம்.
இங்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது தெரியுமா? விமான போக்கவரத்தை முற்றிலுமாக தனியார் மயப்படுத்தியதன் விளைவாக அவசர காலங்களில் தனியார் விமான போக்குவரத்தை நம்பியிருக்க வேண்டிய சூழலுக்கு நம்மை அரசு தள்ளியிருக்கிறது. விமான நிலைய கட்டமைப்புகளை எடுத்துக்கொண்டால் அங்கு நடப்பது பகல் கொள்ளையாக இருக்கிறது. வெளியில் ரூ.20க்கு குடிநீர் விற்கப்பட்டால், விமான நிலையத்தில் ரூ.50க்கு விற்கப்படுகிறது” என்று அடுக்கடுக்கான விமர்சனங்களை கனிமொழி சோமு முன்வைத்திருந்தார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage