காந்தி நகர்: கடந்த புதன்கிழமை வட அரேபியக் கடலில் சென்று கொண்டு இருந்த இந்தியக் கப்பல் எதிர்பாராத விதமாக மூழ்கியது. இதனால் கப்பலில் பயணித்த சுமார் 12 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களைப் பாகிஸ்தான் கடற்படையின் உதவியுடன் இந்தியக் கடற்படை மீட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு இருந்தது இல்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் செயல்படுவதே இதற்குக் காரணமாகும்.
கடலோர காவல் படை: அதேநேரம் பாகிஸ்தான் உடன் முடிந்த வரை இயல்பான உறவை வைத்திருக்கவே இந்தியா முயன்று வருகிறது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அப்பாவி மக்கள் யாராவது தெரியாமல் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்தால்.. அவர்களிடம் அடிப்படை விசாரணை மட்டும் நடத்தியே இந்தியா திருப்பி அனுப்பிவிடும்.
இந்தச் சூழலில் அரபிக் கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களைப் பாகிஸ்தான் உதவியுடன் இந்தியா கடற்படை மீட்டுள்ளது. அதாவது அந்த கப்பல் குஜராத்தின் போர்பந்தரிலிருந்து ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்துக்குச் சென்றுள்ளது. அப்போது கடந்த புதன்கிழமை அந்த கப்பல் வட அரேபியக் கடலில் பயணித்த போது எதிர்பாராத விதமாக மூழ்கியது. இதனால் அந்த 12 கப்பல் பணியாளர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர்.
உதவிய பாகிஸ்தான்: விபத்தில் சிக்கிய கப்பல் 'எம்எஸ்வி அல் பிரன்பிர்’ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த கப்பல் இந்தியக் கடல் பகுதிக்கு வெளியே.. பாகிஸ்தானின் தேடுதல் மற்றும் மீட்புப் பகுதிக்குள் மூழ்கியது. இதையடுத்து அவர்களை மீட்க, இந்தியக் கடலோர காவல்படை மற்றும் பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு நிறுவனமான PMSAவின் உதவியை நாடியுள்ளது. இரு அமைப்பும் இணைந்து நடத்திய மீட்பு நடவடிக்கையில் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இது தொடர்பாக இந்தியக் கடலோர காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த தேடல் மற்றும் மீட்புப் பணிகளை இந்தியக் கடலோர காவல்படை மற்றும் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு நிறுவனம் இணைந்து மேற்கொண்டது. இந்த ஆப்ரேஷன் நிறைவடையும் வரை இரு தரப்பும் தேவையான தகவல்களைத் தொடர்ந்து பரிமாறி வந்தோம்" என்று கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: கடந்த புதன்கிழமை அதிகாலை திடீரென கடலில் மிகப் பெரிய அலைகள் ஏற்பட்ட நிலையில், அதைச் சமாளிக்க முடியாமல் கடந்த புதன்கிழமை அதிகாலை அந்த கப்பல் மூழ்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து மும்பையில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு இது தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
அவர்கள் குஜராத்தின் காந்திநகரில் உள்ள கடலோர காவல் படையின் வடமேற்கு பிராந்திய தலைமையகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக கடலோர காவல்படை கப்பலான சர்தக் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. அப்போது தான் பாகிஸ்தானின் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
மீட்பு: கப்பலில் இருப்போர் கடலில் தத்தளிக்கும் தகவலைக் கேட்டவுடன் பாகிஸ்தான் உடனடியாக தனது உதவியை வழங்கியதாகவும் இந்தியக் கடலோர காவல் படையின அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கப்பல் கடலில் மூழ்கிய நிலையில், 12 பேரும் சிறிய மிதவை படகில் தத்தளித்து வந்தனர். இதையடுத்து அவர்களை இந்தியக் கடலோர காவல் படை மீட்ட நிலையில், அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் நல்ல நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
Weather Data Source: Wettervorhersage 21 tage