கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் மாரிமுத்து என்பவர் பேக்குகளில் அடைத்து எடுத்து சென்றது சந்தியாவின் உடல் என்பதை போலீசார் எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா? மாரிமுத்து பேக்குகளை இழுத்து சென்றதை பார்த்த அந்த பகுதி நாய் ஒன்று விடாமல் குறைத்துக் கொண்டே இருந்தது. அந்த நாயின் அதிக சத்தம் காரணமாக வெளியே வந்த அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு பார்த்த போது தான் அவர்களை நடுங்க வைக்கும் விஷயம் தெரியவந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் இளம் பெண் மரிய சந்தியாவை, அவருடைய கணவர் மாரிமுத்து நேற்று இரவு தீர்த்துக் கட்டியதுடன் உடலை கூறுபோட்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. என்ன நடந்தது என்பதும், எப்படி மாரிமுத்து சிக்கினார் என்பதை பார்ப்போம்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு குடியேறினார். இவர் ஆடு வெட்டும் தொழில் மற்றும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருடைய மனைவி மரிய சந்தியா (வயது 30 ) (இவருக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சீவலப்பேரி குப்பைக்குறிச்சியாகும்). இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.
மாரிமுத்து திட்டம்: மரிய சந்தியாவின் நடத்தையில் சந்தேகத்தில் இருந்த மாரிமுத்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக தெளிவாக திட்டமிட்ட மாரிமுத்து, நேற்று மதியம் அவரை வீட்டுக்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்த உடனே வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாரிமுத்து, சத்தம் வெளியே கேட்ககூடாது என்பதாக டி.வி. சத்தத்தை அதிகம் வைத்தாராம்.
டிவி சத்தம் அதிகம்: பின்னர் மரியசந்தியாவை, மாரிமுத்து வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது. வெட்டும் போது வலி தாங்க முடியாமல் மரியசந்தியா அலறும் போது, சத்தம் வெளியே கேட்காமல் இருக்க டி.வி. சத்தத்தை மாரிமுத்து வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் ஆட்டை அறுப்பது போல் மனைவி உடலை கூறு போட்டாராம். அப்போது டொக், டொக் என சத்தம் வந்ததாம்.
ஆணி அடிக்கிறேன்: இதுபற்றி குடியிருப்பில் உள்ள பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், மாரிமுத்துவிடம் கேட்ட போது, துணியை காய போட ஆணி அடிப்பதாக கூறி திசை திருப்பினாராம்.பின்னர் ஆட்டை வெட்டுவதை போல் மனைவியையும் அவர் துண்டு, துண்டாக வெட்டி கொன்ற மாரிமுத்து தலையை ஒரு பையிலும், மற்ற 2 உடல் பாகங்களை வேறு இரண்டு பைகளிலும் அடைத்தாராம். பின்னர் அந்த பைகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து தரையில் வைத்து இழுத்துச் சென்றுள்ளார்.
நாய் குரைத்து காட்டிக் கொடுத்தது: அதில் ரத்த வாடை வந்த காரணத்தால், மாரிமுத்துவை இழுக்கவிடமால் ஒரு நாய் விடாமல் குரைத்துள்ளது. ஒரு கட்டத்தில் அந்த நாய், வாயால் பேக்கை கடித்து இழுத்திருக்கிறது. இந்த சத்தத்தைக் கேட்டும், மாரிமுத்துவின் ஒரு பேக்கை நாய் கவ்வி இழுத்ததையும் பார்த்ததும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து மாரிமுத்துவை கேள்விகளால் துளைக்க தொடங்கினார்கள். அவர்களிடம் மாரிமுத்து மாட்டிறைச்சி என்று கூறி திசை திருப்ப முயன்றுள்ளார். ஆடு வெட்டும் தொழில் செய்பவர் என்பதால் நம்புவார்கள் என்று மாரிமுத்து நினைத்தாராம்.
பைகளில் சந்தியா: ஆனால் மக்கள் நம்பவில்லை. மாரிமுத்து இழுத்து வந்த பையை திறந்து பார்த்த போது மரிய சந்தியாவின் உடல்களின் பாகங்கள் இருந்ததை கண்டனர். உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மாரிமுத்துவையும் பிடித்து வைத்தனர். பின்னர் போலீசார் விரைந்து வந்து 3 பைகளில் இருந்த மரிய சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.