மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரரும், சச்சினின் பள்ளிக்கால நண்பருமான வினோத் காம்ப்ளி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவப் பரிசோதனையில், வினோத் காம்ப்ளியின் மூளையில் இரத்தம் உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமை இரவு தானே மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சமீப காலமாகவே அவர் பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, வினோத் காம்ப்ளி, சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி அவரே விக்கி லால்வானியின் யூடியூப் சேனலில் விளக்கம் அளித்துப் பேசியிருந்தார். வினோத் காம்ப்ளி தனக்கு அடிக்கடி தலைசுற்றல் ஏற்படுவது பற்றியும் அந்த வீடியோவில் கூறியிருந்தார். 2013ஆம் ஆண்டில் காம்ப்ளி இரண்டு இருதய அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டார். அதற்கு சச்சின் நிதியுதவி செய்ததையும் காம்ப்ளி தெரிவித்தார்.
வினோத் காம்ப்ளி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பால்யகால நண்பர். 1988 ஆம் ஆண்டு பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி ஜோடி 664 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இந்த போட்டிக்கு பின்னர் இருவர் மீதும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பார்வை திரும்பியது. இருவரும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தனர்.
வினோத் காம்ப்ளி இந்திய அணிக்காக 9 ஆண்டு காலம் விளையாடினார். இந்தியாவுக்காக 2 இரட்டை சதங்கள் உட்பட நான்கு டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார்.1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் வீரர்களில் வினோத் காம்ப்ளியும் ஒருவர். கபில் தேவ், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட்டர்கள் பலர் வினோத் காம்ப்ளியின் சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர்.
அண்மையில், மறைந்த கிரிக்கெட் பயிற்சியாளர் ராம்கந்த் அச்சரேகர் நினைவேந்தல் நிகழ்வில் சமீபத்தில் கலந்து கொண்டார் வினோத் காம்ப்ளி. இந்த நிகழ்வில் சச்சின் டெண்டுல்களும் கலந்து கொண்டிருந்தார். அப்போது, இருவரும் பேசிக்கொண்ட வீடியோக்கள் வெளியாகி இருந்தன. அப்போது, மிகவும் உடல் நலன் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத சூழலில் இருந்தார் காம்ப்ளி.
இந்தச் சூழலில் தான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமை இரவு தானே மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் வினோத் காம்ப்ளி சிகிச்சை பெற்று வருவதை அறிந்த ரசிகர் ஒருவர், அங்கு சென்று அவரை சந்தித்து வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வெளியிட்டார். இதையடுத்து, வினோத் காம்ப்ளி விரைவில் குணம் அடைய வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவ பரிசோதனையில் வினோத் காம்ப்ளியின் மூளையில் இரத்தக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர். காம்ப்ளிக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் விவேக் திரிவேதி கூறுகையில், “காம்ப்ளி ஆரம்பத்தில் சிறுநீர் தொற்று மற்றும் தசைப் பிடிப்புகள் இருப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ச்சியான பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரைக் கண்காணிக்கும் மருத்துவக் குழு, அவரது மூளையில் இரத்தம் உறைந்து இருப்பதைக் கண்டறிந்தது. காம்ப்ளியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை கூடுதல் மருத்துவ பரிசோதனைகளை மருத்துவக் குழுவினர் மேற்கொள்வார்கள். காம்ப்ளிக்கு அவரது வாழ்நாள் முழுவதும் இலவச சிகிச்சை அளிக்க மருத்துவமனை பொறுப்பாளர் எஸ் சிங் முடிவு செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.