ரியல் எஸ்டேட்டே மாறுது.. சென்னை, கோவையில் உச்சாணிக்கு உயரும்

post-img

சென்னை: சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் வீடுகள், நிலங்களின் மதிப்பு உயர்ந்துவருகிறது.. இதுகுறித்த அறிக்கை ஒன்றும் வெளியாகி உள்ளது.


சென்னையின் நில மதிப்பு உயர்ந்துவிட்டதாக ரியல் எஸ்டேட் தரப்பில் சமீபத்தில்கூட ஒரு செய்தி வெளியாகியிருந்துது.. அதாவது, மெட்ரோ ரெயில் பாதை செல்லும் பகுதிகளை சுற்றியுள்ள இடங்களின் சொத்து மதிப்பு திடீரென 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது.. மற்ற பகுதிகளை காட்டிலும் மெட்ரோ ஸ்டேஷன் பகுதிகளில், 50 சதவீதம் வரை சொத்து மதிப்பை அதிகரித்துவிட்டதாம்.


உதாரணத்துக்கு 2013-ம் ஆண்டு கீழ்ப்பாக்கத்தில் சதுரடி ரூ.11,600 என்றிருந்தது இப்போது, ரூ.13,200 ஆகிவிட்டதாம்.. வடபழனியில் சதுரடி ரூ.7,900 என்றிருந்தது இப்போது, ரூ.10 ஆயிரத்துக்கும், கோயம்பேட்டில் சதுரடி 7000 ரூபாயிலிருந்து கிட்டத்தட்ட 9 ஆயிரம் ரூபாய்க்கும் இடம் ஏறிவிட்டது..


சைதாப்பேட்டை: சைதாப்பேட்டையில் ரூ.9,500-லிருந்து 12 ஆயிரம் ரூபாயாக எகிறிவிட்டது. ஆக, சராசரியாக இடத்தின் மதிப்பு 50 சதவீதம் வளர்ச்சியடைந்து வந்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த பகுதிகளே இப்படி என்றால், அண்ணாசாலை பகுதியில், அதற்கு மேல் விலை கூடிவருகிறது. ஓஎம்ஆர் ராஜீவ்காந்தி சாலையிலும், 30 சதவீதம் அளவுக்கு நிலத்தின் மதிப்பு அதிகரித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல, வடசென்னை, தென் சென்னையின் பல்வேறு இடங்கள் மாதவரம், சோழிங்கநல்லூர், பூந்தமல்லி, போரூர் போன்ற இடங்களில் சொத்து மதிப்பு திடீரென 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.. அன்று வளர்ச்சி பெறாத இடமாக கருதப்பட்ட வடசென்னையின் பகுதிகள் இன்று வளர்ந்து உயர்ந்துள்ளன.. திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளுக்கு மெட்ரோ ரெயில் சேவை வந்த காரணத்தினாலேயே, இந்த இடத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டதாம்.


மத்திய அமைச்சகம்: இப்படிப்பட்ட சூழலில், சென்னை, கோவை பகுதிகளில் எல்லாம் வீடுகளின் விலை உயர்ந்துவிட்டதாக இன்னொரு செய்தி வந்துள்ளது.. மத்திய நிதி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய வீட்டுவசதி வங்கி, வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் பணிகளை செய்து வருகிறது...


இந்தியா முழுவதும், 50 நகரங்களில் வீடுகளின் விலை விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, காலாண்டுக்கு ஒரு முறை ஆய்வு அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதன்மூலம், எந்தெந்த நகரங்களில் வீடுகளின் விலையில் தற்போதைய நிலவரம் குறித்து பொதுமக்கள் அறிய முடியும்.


இப்போதுகூட ஒரு அறிக்கை வந்துள்ளது.. ஜுன் வரையிலான வீடு விலைகள் குறித்து, தேசிய வீட்டுவசதி வங்கி அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, கோவை நகரங்களின் கட்டுமான நிலையில் உள்ள வீடுகளின் சராசரி விலை விகிதங்கள் உயர்ந்துள்ளதாக தெரிகிறது.



சென்னை வீடுகள்: சென்னையில், கடந்த 2022 ஜுன் மாதம், 117 ஆக இருந்த புள்ளிகள், 2023 மார்ச் மாதம், 120 ஆக உயர்ந்து, ஜுன் மாதம் 118 என்றுள்ளது.. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் சராசரி விலை, கடந்த 2022 ஜுன், சதுர அடி, 7,999 ரூபாயாக இருந்த நிலையில், 2023 ஜுன் மாதம் 8,086 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கட்டுமான நிலையில் உள்ள வீடுகளின் சராசரி விலையானது, 2022 ஜுனில், சதுர அடி, 10,870 ரூபாயாகவும், இப்போது 2023 ஜுன் மாதம் 11,672 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.


கோவை வீடுகள்: கோவையில், வீடுகளின் விலை புள்ளிகள், 2022 ஜுன் மாதம் 130 ஆகவும், 2023 மார்ச்சில், 133 ஆகவும் உயர்ந்து, ஜூனில், 130 ஆக குறைந்துள்ளது.. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் சராசரி விலை, 2022 ஜூனில், சதுர அடி, 6,157 ரூபாயாகவும், 2023 ஜூனில், 6,147 ரூபாயாகவும் குறைந்துள்ளது. கட்டுமான நிலையில் உள்ள வீடுகளின் சராசரி விலை, 2022 ஜூனில், சதுர அடி, 6,720 ரூபாயாகவும், 2023 ஜூனில், 7,993 ரூபாயாக உயர்ந்துள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Post