சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. அதே நேரத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர் சில மாவட்ட தலைவர்கள். பல ஆண்டுகளாய் தங்கள் மாவட்டங்களில் பணி செய்து வந்தவர்களை வேறு மாவட்ட செயலாளர்களாக நியமிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவதால், விஜய் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் அதிரடியாக தெரிவித்திருக்கின்றனர். என்னடா இது ஒரு கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சிக்கு வந்த சோதனை எனது விமர்சிக்கின்றனர்.
தனது கேரியரின் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வருவதாக விஜய் அறிவித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சொன்னது போலவே அரசியலில் குதித்தும் விட்டார் விஜய்.
கடந்த பிப்ரவரி மாதமே கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.
அன்று முதல் தற்போது வரை விஜய் தான் தமிழக அரசியலில் பேசு பொருளாக இருக்கிறார். ஆதரவாகவோ எதிராகவோ கண்டிப்பாக விஜய் பற்றியே ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் பிற கட்சிகளும் பேசி வருகின்றன. விஜய் மாநாட்டில் மாஸ் காட்டிய நிலையில் நிச்சயம் வரும் தேர்தலில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். தனித்துப் போட்டியா? கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் தற்போதைக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் என விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கட்சியில் பதவி அளிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் அமைப்பு ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டு இருக்கிறார். தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற இருக்கிறது.
மேலும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் என தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. மேலும் துணைத் தலைவர், துணைச் செயலாளர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகளவு வாய்ப்பு தர திட்டமிடப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் 28 சார்பு அணிகளும் விஜய் கட்சியில் உருவாக்கப்பட இருக்கிறது. மகளிர் அணி, தொண்டரணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட 28 அணிகளுக்கும் தலைவர், செயலாளர், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது.
இதுவரை ஏற்கனவே விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த மாவட்ட தலைவர்கள், ஒன்றிய தலைவர்களே தற்போது கட்சியின் மாவட்ட செயலாளராகவும், மாவட்ட தலைவர்களாகவும் தங்களை கருதிக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆன்ந்தின் சில நடவடிக்கைகள் 'பழைய' நிர்வாகிகளை கடும் கோபமடைய செய்திருக்கிறது. என்ன நடக்கிறது தமிழக வெற்றி கழகத்தில் என விசாரித்த போது பல தகவல்களை நம்மிடம் கொட்டி தீர்த்தனர் 'மலைக்கோட்டை' மாவட்டத்தை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே விஜய் ரசிகர்களாக நாங்கள் பணியாற்றி வந்தோம். இன்னும் சிறிது நாளில் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பட்டியல் வெளியிடலாம் என எதிர்பார்த்து வருகிறோம். விஜய் மக்கள் இயக்கத்தில் நன்றாக செயல்பட்டவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்க வேண்டும் என எங்கள் தலைவர் ஏற்கனவே கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் தான் நாங்கள் தற்போது மாநாட்டுக்கு கூட செலவு செய்து தொண்டர்களை அழைத்து சென்றோம். ஆனால் 'அவரது' நடவடிக்கைகள் ஏராளமான நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.
ஏற்கனவே நாங்கள் இருக்கும் பணிகளில் பகுதிகளில் மாவட்ட செயலாளர் பதவியை வழங்காமல், வேறு பகுதிகளில் மாவட்ட செயலாளர்களாக நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது. உதாரணத்திற்கு மதுரையை எடுத்துக் கொண்டால், இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ள பகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்றால், ஒரே மாவட்டத்தில் நான்கு முதல் எட்டு சட்டமன்ற தொகுதியில் வரை இருக்கும்.
அப்படி கிழக்குப் பகுதியில் பணியாற்றுபவர்களை மேற்கு பகுதியிலும், மேற்கு பகுதியில் பணியாற்றுபவர்களை கிழக்குப் பகுதியில் என மாற்றி மாற்றி நியமனம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நாங்கள் எங்கள் பகுதியில் ஏராளமான செலவு செய்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் வேறு பகுதியில் எங்களை நியமனம் செய்தால் அங்கிருக்கும் நிர்வாகிகள் எங்கள் மீது அதிருப்தி அடைவார்கள். இதுகுறித்து தலைமைக்கு தெரிவிக்கலாம் என்று நினைத்தாலும் பொதுச் செயலாளரை மீறி பேச முடியவில்லை.
ஏதாவது நிகழ்ச்சியில் தலைவரை சந்தித்து பேச முயற்சித்தாலும் அவர் விடுவதில்லை. இப்படியே போனால் வேறு வழியின்றி 'தலைவர்' வீட்டு முன் போராட்டம் நடத்தி கவனத்தை ஈர்க்க போவதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.